தேடுதல்

Vatican News
அருள்பணியாளர்களின், பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி அருள்பணியாளர்களின், பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி  (Joachim Schäfer - Ökumenisches Heiligenlexikon)

புனிதத்தின் பாதையைக் காட்டிய புனித வியான்னி

பிரான்ஸ் நாட்டின் ஆர்ஸ் நகரில் அமைந்துள்ள புனித ஜான் மரிய வியான்னி திருத்தலத்தில், சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில், இப்புனிதரின் புண்ணிய வாழ்வைக் குறித்து எடுத்துரைத்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் எளிமை, பரிவு, அருளடையாளங்களில் பற்றுறுதி, மற்றும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆவல் ஆகிய நற்பண்புகளால், புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், புனிதத்தின் பாதையை நமக்குக் காட்டியுள்ளார் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

அருள்பணியாளர்களின், பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாள், ஆகஸ்ட் 4, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, பிரான்ஸ் நாட்டின் ஆர்ஸ் நகரில் அமைந்துள்ள இப்புனிதரின் திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இப்புனிதரின் புண்ணிய வாழ்வைக் குறித்து எடுத்துரைத்தார்.

தன் அருள்பணித்துவ வாழ்வின் 40ம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடிவரும் கர்தினால் பரோலின் அவர்கள், தான் அருள்பணித்துவ வாழ்வைத் தெரிவு செய்வதற்கு, புனித வியான்னி அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு பெரும் உந்து சக்தியாக இருந்தது என்று கூறினார்.

2019ம் ஆண்டு, இப்புனிதர், இறையடி சேர்ந்ததன் 160ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்ட வேளையில், அருள்பணியாளருக்கு ஒரு சிறப்பு மடலை எழுதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெறி தவறிய ஒரு சில அருள்பணியாளரின் செயல்பாடுகளால், அருள்பணித்துவ வாழ்வே கறைபடிந்ததைப்போல் உணர்கிறோம் என்று, தன் வருத்தத்தை வெளியிட்டார் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் அருள்பணித்துவ அழைப்பு, அவரவர் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் சன்மானம் அல்ல, மாறாக, இறைவனின் பேரன்பினால் வழங்கப்படும் ஒரு பெரும் கொடை என்பதை புனித ஜான் மரிய வியான்னி சொல்லித்தருகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அருள்பணித்துவ வாழ்வின் மேன்மை, நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் காணப்படும் மகிழ்வினாலும், நம்பிக்கையாலும் பறைசாற்றப்படுகிறது என்பதற்கு புனித வியான்னி அவர்களின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு என்று, இப்புனிதரது மரணத்தின் 150ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட 2009ம் ஆண்டில், அப்போதையத் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்கள் கூறியதையும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

05 August 2020, 14:46