தேடுதல்

Vatican News
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்களின் அடக்கச் சடங்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்களின் அடக்கச் சடங்கு  (ANSA)

மூத்த சகோதரர் அடக்கத்திற்கு முன்னாள் திருத்தந்தையின் மடல்

"என் சகோதரர் இவ்வுலகின் இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும் வேளையில், அவருக்குத் தேவையான உதவிகளை ஆற்றிவரும் உங்களுடன், நானும் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறேன்" - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"என் சகோதரர் இவ்வுலகின் இறுதிப்பயணத்தை மேற்கொள்ளும் வேளையில், அவருக்குத் தேவையான உதவிகளை ஆற்றிவரும் உங்களுடன், நானும் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறேன்" என்ற சொற்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனியின் Regensburg மறைமாவட்ட ஆயருக்கும், மக்களுக்கும் அனுப்பியிருந்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர் அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் (Georg Ratzinger) அவர்கள், ஜூலை 1ம் தேதி, தன் 96வது வயதில், இறையடி சேர்ந்ததையடுத்து, அவரது, அடக்கத் திருப்பலி, ஜூலை 8, இப்புதனன்று, காலை 10 மணிக்கு, Regensburg பேராலயத்தில் இடம்பெற்றது.

முன்னாள் திருத்தந்தையின் மடல்

இத்திருப்பலியில் நேரடியாகப் பங்கேற்க இயலாத முன்னாள் திருத்தந்தை அவர்கள், அத்திருப்பலி நேரடியாக ஒளிபரப்பானதை, வத்திக்கானில் இருந்தவண்ணம் கண்டார்.

தன் மூத்த சகோதரருக்கு விடைபகரும் வண்ணம், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதியிருந்த உணர்வுப்பூர்வமான மடலை, அவரது தனிப்பட்ட செயலராகப் பணியாற்றும் பேராயர் கியோர்க் கான்ஸ்வேயின் (Georg Gänswein) அவர்கள், இந்த அடக்கத் திருப்பலியில் வாசித்தார்.

தன் சகோதரரின் மரணத்தைப்பற்றி கேள்விப்பட்ட பல்லாயிரம் பேர், தங்கள் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து, தனக்கு தனிப்பட்ட முறையில் செய்திகள் அனுப்பியிருந்ததற்காக, முன்னாள் திருத்தந்தை, இம்மடல் வழியே, அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.

மூத்த சகோதரர் வாழ்வின் மூன்று அம்சங்கள்

தன் சகோதரரின் வாழ்வில் விளங்கிய மூன்று அம்சங்களை தன் மடலில் கூறியுள்ள முன்னாள் திருத்தந்தை அவர்கள், தன் சகோதரர், அருள்பணித்துவ வாழ்வையும், இசையையும் இணைத்ததை, முதல் அம்சமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நகைச்சுவை உணர்வையும், வெளிப்படையாகப் பேசும் பண்பையும் தன் சகோதரரின் இரண்டாவது அம்சமாகவும், இறைவனை தன் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தது அவரது வாழ்வின் மூன்றாவது அம்சமாகவும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுலகில் இறுதி சந்திப்பு

ஜூன் மாதத்தில் தான் ஜெர்மனிக்கு சென்றதைப்பற்றி இம்மடலில் குறிப்பிட்டுள்ள முன்னாள் திருத்தந்தை அவர்கள், ஜூன் 22ம் தேதி, தான் அவரிடமிருந்து விடைபெற்றபோது, அதுவே, இவ்வுலகில் தாங்கள் இருவரும் சந்திக்கும் இறுதி வாய்ப்பு என்பதை இருவரும் உணர்ந்திருந்ததாகவும், மறுஉலகில், தாங்கள், கட்டாயம் சிந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் பிரிந்ததாகவும் கூறியுள்ளார்.

"அன்புள்ள கியோர்க், நீர் இவ்வுலகில் எனக்காக செய்தவை, எனக்காக அடைந்த துன்பங்கள், எனக்காக தந்தவை அனைத்திற்கும் நன்றி" என்ற சொற்களுடன், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இம்மடலை நிறைவு செய்துள்ளார்.

தன் சகோதரரின் இறுதி நாள்களில் அவருக்கு உறுதுணையாக இருந்த Regensburg ஆயர் Rudolf Voderholzer அவர்களுக்கும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இம்மடலில் தன் சிறப்பான நன்றியை தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் – அனுதாபமும், செபங்களும்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்களின் மறைவைக் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், செபங்களையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 2ம் தேதி மடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

தங்கள் சகோதரரை இறைவன் வாக்களிக்கப்பட்ட இல்லத்திற்கு அழைத்துச் செல்லவும், வாழ்நாளெல்லாம் பிரமாணிக்கமாக இறைவனுக்குப் பணியாற்றிய அந்த ஊழியனுக்குரிய பரிசை இறைவன் அவருக்கு வழங்கும்படியாகவும் தான் செபிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த சகோதரரைச் சந்தித்த முன்னாள் திருத்தந்தை

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்கள், தன் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்ட Regensburg நகரில் இறையடி சேர்ந்தார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நோயுற்றிருக்கும் தன் மூத்த சகோதரர், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்களைக் காண, ஜூன் 18ம் தேதி, வத்திக்கானிலிருந்து, Regensburg நகருக்குச் சென்று, அவருடன் நான்கு நாள்கள் தங்கிவிட்டு, ஜூன் 22ம் தேதி மீண்டும் வத்திக்கானுக்குத் திரும்பினார்.

அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் 1924-2020

1924ம் ஆண்டு சனவரி 15ம் தேதி, பவேரியாவின் Pleiskirchen என்ற ஊரில், ஜோசப் மற்றும் மரியா இராட்சிங்கர் தம்பதியரின் முதல் மகனாகப் பிறந்த கியோர்க் அவர்கள், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராய், தன் 11வது வயதில் கோவிலில் 'ஆர்கன்' இசைக்கருவியை வாசிக்கும் பொறுப்பை பெற்றார்.

1951ம் ஆண்டு, ஜூன் 29ம் தேதி, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவன்று, கியோர்க் இராட்சிங்கர் அவர்களும், இளைய சகோதரர் ஜோசப் இராட்சிங்கர் அவர்களும், ஒரே நாளில், அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

இசைத்துறையில் மிகுந்த ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த கியோர்க் இராட்சிங்கர் அவர்கள், 1964ம் ஆண்டு முதல், 1994ம் ஆண்டு முடிய, 30 ஆண்டுகள், Regensburg பேராலய இசைக்குழுவின் இயக்குனராகப் பணியாற்றிய வேளையில், இவ்விசைக்குழுவுடன், உலகின் பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

2011ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், அருள்பணி கியோர்க் இராட்சிங்கர் அவர்களும், உரோம் நகரில், தங்கள் அருள்பணித்துவ 60ம் ஆண்டு நிறைவை ஒன்றாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

09 July 2020, 15:03