ஈராக் நாட்டின் யாஸிதி இனத்தவர் ஈராக் நாட்டின் யாஸிதி இனத்தவர் 

"ஒப்புரவாகும் நோக்கத்துடன் செவிமடுத்தல்" – காணொளிப் பதிவு

திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறை, "ஒப்புரவாகும் நோக்கத்துடன் செவிமடுத்தல்" என்ற தலைப்பில் தன் மூன்றாவது காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் எல்லைப்பகுதியில் நாங்கள் வாழ்வதாலும், நாங்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், உள்நாட்டிலேயே நாங்கள் சொந்த இடங்களைவிட்டு அகற்றப்பட்டவர்களாக வாழ்கிறோம் என்று, யாஸிதி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி கூறுவதை, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறை, ஒரு காணொளிப் பதிவாக வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் ஓர் அங்கமாக செயலாற்றும், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறை, ஜூலை 22 இப்புதனன்று, "ஒப்புரவாகும் நோக்கத்துடன் செவிமடுத்தல்" என்ற தலைப்பில் தன் மூன்றாவது காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கு ஒரு தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளிப் பதிவு, ஈராக் நாட்டின் யாஸிதி இனத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது.

தன் சொந்த கிராமமான Dogoriயிலிருந்து  தப்பியோடும் நிலைக்கு உள்ளான சாரா ஹாசன் (Sarah Hassan) என்ற பெண்மணி, தான் எவ்வாறு, குர்திஸ்தான் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாலும், இஸ்லாமியராலும் வரவேற்கப்பட்டார் என்று இந்தக் காணொளியில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களின் கோவில்களும், இஸ்லாமியரின் தொழுகைக்கூடங்களும், தப்பியோடிச் சென்ற தங்களுக்கு புகலிடம் தந்தன என்று கூறிய இளம்பெண் ஹாசன் அவர்கள், வன்முறை, ஒருகாலத்திலும் தீர்வுகள் தராது என்பதை, இக்காணொளியில், வலியுறுத்திக் கூறியுள்ளார்.

குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இயேசு கிறிஸ்துவைப்போல தப்பியோடும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியை மையப்படுத்தி, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறை, ஒவ்வொரு மாதமும் காணொளி ஒன்றை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2020, 14:04