பேராயர் வின்சென்சோ பாலியா பேராயர் வின்சென்சோ பாலியா 

மனித வாழ்வு, ஒருவரையொருவர் சார்ந்தது - பேராயர் பாலியா

நம் மருத்துவ உலகை சிதைத்துவிட்ட இந்தக் கொள்ளைநோயை தடுக்கும் வழிகளைக் காண்பதற்கு பதிலாக, நாடுகள் ஒன்றையொன்று குறைகூறி வருவது வேதனை தருகிறது - பேராயர் பாலியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வியல் பாப்பிறை கலைக்கழகம், "உலகளாவிய கொள்ளைநோய் யுகத்தில், மனித குழுமம்: வாழ்வின் மறுபிறப்பு பற்றிய தியானங்கள்" என்ற தலைப்பில், ஜூலை 22ம் தேதி, ஏடு ஒன்றை வெளியிட்டதையடுத்து, இக்கழகத்தின் தலைவர், பேராயர், வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், இந்த ஏட்டைக் குறித்து தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

வாழ்வியல் பாப்பிறை கலைக்கழகம், 2019ம் ஆண்டு சனவரி 6ம் தேதி தன் 25ம் ஆண்டு நிறைவை சிறப்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய சிறப்புச் செய்திக்கு வழங்கியிருந்த ‘Humana communitas’, அதாவது, ‘மனித குடும்பம்’ என்ற தலைப்பை, இந்த ஏட்டின் தலைப்பாக வழங்க தீர்மானித்தோம் என்று பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

இன்றைய உலகம் சக்திமிக்க, விரைவாகச் செயலாற்றும் தொடர்புக்கருவிகளைக் கண்டுபிடித்து விட்டதாகப் பெருமைப்படும் இவ்வேளையில், நம்மிடையே பரவிய இந்தக் கொள்ளைநோயைக் குறித்து, சரியான, தெளிவான விரைவான தகவல்கள் பரிமாறப்படவில்லை என்பது, நாம் வாழும் காலத்தின் மிகப்பெரும் குறை என்று பேராயர் பாலியா அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

நம் மருத்துவ வசதிகள் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், நம் மருத்துவ உலகை பெருமளவு சிதைத்துவிட்ட இந்தக் கொள்ளைநோயை தடுக்கும் வழிகளைக் காண்பதற்கு பதிலாக, நாடுகள் ஒன்றையொன்று குறைகூறி வருவது வேதனை தருகிறது என்று பேராயர் பாலியா அவர்கள் எடுத்துரைத்தார்.

மக்கள் அனைவரும் நலமாக இருப்பதும், அயலவரின் நலனைக் காப்பதும், ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதை, இந்தக் கொள்ளைநோய் நமக்கு உணர்த்தியுள்ளது என்பதையும், பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

மனித வாழ்வு, ஒருவரையொருவர் சார்ந்தது என்பதையும், சமுதாயத்தின் எந்நிலையில் நாம் இருந்தாலும், நாம் அனைவருமே சக்தியற்றவர்கள் என்பதையும் உணர்த்துவதில், கிறிஸ்தவர்கள் முன்னின்று செயலாற்றவேண்டும் என்று பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2020, 13:36