மனித வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு  தலித்தா கும் அமைப்பின அருள் சகோதரிகள் மறுவாழ்வு மனித வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு தலித்தா கும் அமைப்பின அருள் சகோதரிகள் மறுவாழ்வு 

மனித வர்த்தகத்தை ஒழிக்க பாடுபடும் அருள் சகோதரிகள்

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையில், முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்கள், பெண் துறவிகளே - கர்தினால் மைக்கிள் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையில், முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்கள், பெண் துறவிகளே என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பெண் துறவிகளின் முன்னணி முயற்சிகள்

ஜூலை 30, இவ்வியாழனன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், மனித வர்த்தகத்தை ஒழிக்க முன்னணி முயற்சிகளை மேற்கொள்வோர் பெண் துறவிகள் என்று கூறினார்.

உலகின் பல நாடுகளிலும் பணியாற்றும் பெண் துறவிகள், அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப, மனித வர்த்தகத்தை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும், படைப்பாற்றல் மிகுந்த தீர்வுகளைக் கண்டு, செயல்படுத்தி வருகின்றனர் என்று கர்தினால் செர்னி அவர்கள் எடுத்துரைத்தார்.

தடுத்தல், விடுவித்தல், மறுவாழ்வு வழங்குதல்...

மனித வர்த்தகம் என்ற குற்றத்தைத் தடுத்தல், இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளோரை விடுவித்தல், அவர்களை மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்து, மறுவாழ்வு வழங்குதல், இந்த வர்த்தகத்தைத் தடுக்கும்வண்ணம் விழிப்புணர்வை வளர்த்தல் என்று, பல நிலைகளிலும் பெண் துறவிகள் பணியாற்றுகின்றனர் என்பதை, கர்தினால் செர்னி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19, மனித வர்த்தகம் – இரு கொள்ளைநோய்கள்

உலகெங்கும் பரவி, தற்போது இவ்வுலகில் தங்கிவிட்ட கொரோனா கொள்ளைநோய் போலவே, மனித வர்த்தகமும், உலகெங்கும் பரவி, மனித சமுதாயத்தில் தங்கிவிட்ட கொள்ளைநோயாக மாறிவிட்டது என்பதை உணர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொள்ளைநோயை வேரோடு அழிக்க மிகுந்த பொறுமையும், அறிவுசார்ந்த நடவடிக்கைகளும் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார் என்பதை, கர்தினால் செர்னி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தை ஒரு வாய்ப்பாகக் கருதி, மனித வர்த்தகம் என்ற கொடுமை அதிகரித்துள்ளது என்பதை வருத்தத்துடன் வெளியிட்ட கர்தினால் செர்னி அவர்கள், இந்த வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்கள் நம்மைச் சுற்றி இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் இந்தக் கொடுமையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2020, 13:41