சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பின் பணியேற்பு நிகழ்வு சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பின் பணியேற்பு நிகழ்வு 

அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ விழா

சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், இளையோரை புதிதாக இணைக்க, அக்டோபர் 4ம் தேதி, ஞாயிறன்று நடைபெறும் நிகழ்வு, பெற்றோர், உற்றார் என, பங்கேற்பாளர்கள் யாருமின்றி நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், இளையோரை புதிதாக இணைக்கும் நிகழ்வு, வருகிற அக்டோபர் 4ம் தேதி, ஞாயிறன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, மே மாதம் 6ம் தேதி நடைபெற்றுவந்த இந்நிகழ்வு, கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால், அக்டோபர் 4, இத்தாலியின் பாதுகாவலராகக் கருதப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடைபெறும் இந்த விழாவில், 38 புதிய காவல் வீரர்கள் இப்பணியில் இணைக்கப்படுவர் என்றும், கோவிட் 19 தொற்றுக்கிருமியால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக, இந்நிகழ்வு, பெற்றோர், உற்றார் என, பங்கேற்பாளர்கள் யாருமின்றி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4, ஞாயிறன்று காலை 7.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் திருப்பலியுடன் இந்நாள் துவங்கும் என்றும், மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித தமசு வளாகத்தில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என்றும், இவ்விரு நிகழ்வுகளும் வத்திக்கான் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம்.

‘சுவிஸ் கார்ட்ஸ்’என்ற பெயரில் இயங்கிவரும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்கள், திருத்தந்தை நிகழ்த்தும் திருவழிபாடுகள், பொதுச் சந்திப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். இன்னும் வத்திக்கான் மாளிகையையும் பாதுகாக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 13:51