தேடுதல்

Vatican News
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் திரும்பினார் 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கான் திரும்பினார்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், Ziegetsdorf நகரிலுள்ள அவரின் பெற்றோர் மற்றும், மூத்த சகோதரியின் கல்லறைகளைத் தரிசித்து சிறிதுநேரம் செபித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியில் நோயுற்றுள்ள தன் உடன்பிறப்பான அருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களைப் பார்ப்பதற்காக, அந்நாடு சென்ற, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூன் 22, இத்திங்களன்று வத்திக்கான் திரும்பியுள்ளார்.

96 வயது நிரம்பிய தன் சகோதரர் அருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களுடன் ஐந்து நாள்கள் தங்கியிருந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், Ziegetsdorf நகரிலுள்ள அவரின் பெற்றோர் மற்றும், மூத்த சகோதரியின் கல்லறைகளையும் தரிசித்து சிறிதுநேரம் செபித்தார். புனிதத்தண்ணீரை அந்த கல்லறைகள் மீது தெளித்து ஆசீரும் அளித்தார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.  

Regensburg நகருக்கு அருகிலுள்ள Pentling என்ற ஊரில், தனது குடும்பம் வாழ்ந்த இல்லத்தையும் பார்வையிட்டார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர் 1977ம் ஆண்டில், Munich மற்றும், Freising, உயர்மறைமாவட்டத்திற்குப் பேராயராக நியமிக்கப்படுவதற்குமுன், இந்த இல்லத்தில் தங்கிக்கொண்டு, கோட்பாட்டு இயல் பேராசிரியாரகப் பணியாற்றினார். இந்த இல்லம், தற்போது, இவரின் இறையியல் கருவூலத்தைப் பராமரிக்கும், 16ம் பெனடிக்ட் நிறுவனத்தின் தலைமையிடமாக அமைந்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் Nikola Eterović அவர்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அவர்கள் சந்தித்தார். பேராயர் Eterović அவர்கள், இத்திருத்தந்தையின் தலைமைப்பணிக் காலத்தில், ஆயர்கள் பேராயத்தின் செயலராகப் பணியாற்றியவர்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்த ஜெர்மனி பயணத்திற்குமுன், தனது தலைமைப்பணிக் காலத்தில், 2006ம் ஆண்டில், ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்டார்.

நோயுற்றிருக்கும் தன் சகோதரர், அருள்திரு ஜார்ஜ் அவர்களுடன் இருப்பதற்காக, ஜூன் 18, கடந்த வியாழனன்று ஜெர்மனியின் Regensburg நகருக்குச் சென்றார், திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அவருடன் அவரின் தனிப்பட்ட உதவியாளர், பேராயர் Georg Gänswein, வத்திக்கான் காவல்துறையின் உதவித்தலைவர், திருத்தந்தையை பராமரிக்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும், உடன்உழைப்பாளர்களுடன் அந்நகர் சென்றார்.

96 வயது நிரம்பிய அருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களுக்கும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், மூன்று வயது வித்தியாசம் உள்ளது.

23 June 2020, 15:19