பேராயர் ஃபிசிக்கெல்லா புதிய மறைக்கல்வித் தொகுப்பை வெளியிடுகிறார் பேராயர் ஃபிசிக்கெல்லா புதிய மறைக்கல்வித் தொகுப்பை வெளியிடுகிறார் 

திருஅவையின் வாழ்வில் மகிழ்வான நிகழ்வு

திருஅவை என்றென்றும் மனம் தளராமல் அறிவிக்கவேண்டிய நற்செய்திப்பணிக்கு, புதிய மறைக்கல்வித் தொகுப்பு மிகவும் உதவியாக இருக்கும் - பேராயர் ஃபிசிக்கெல்லா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புதிய மறைக்கல்வித் தொகுப்பு வெளியீடு, திருஅவையின் வாழ்வில் மகிழ்வான நிகழ்வு என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், ஜூன் 25, இவ்வியாழனன்று கூறினார்.

புதிய மறைக்கல்வித் தொகுப்பின் இத்தாலியப் பிரதியை, இவ்வியாழனன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டு உரையாற்றிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், ஏனைய முக்கிய மொழிகளிலும் இந்த தொகுப்பு வெளியிடப்படும் என்றும், இது, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின் மூன்றாவது முறையாக வெளிவந்துள்ள மறைக்கல்வித் தொகுப்பு என்றும் அறிவித்தார்.

இந்த புதிய மறைக்கல்வித் தொகுப்பின் அவசியம் மற்றும் அது, தயாரிக்கப்பட்ட முறை குறித்து விளக்கிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், பன்னாட்டளவில், விரிவாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.

நாம் வாழும் டிஜிட்டல் கலாச்சாரத்தின் உலகளாவிய கூறுகள், அவை, கடந்த பத்து ஆண்டுகளில் மக்களின் பழக்கவழக்கங்களில் வெளிப்படுத்தியுள்ள அடிப்படை மாற்றம், தனிப்பட்ட நபரின் தனித்துவம் மற்றும், ஒருவர் ஒருவரோடு உள்ள உறவுகளில் உருவாக்கியுள்ள தாக்கங்கள் போன்றவை, இந்த புதியத் தொகுப்பு தயாரிக்கப்பட பின்னணியாக இருந்தன என்றும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் கூறினார்.

உலகமயமாக்கப்பட்ட கலாச்சார உலகில் காணப்படும் புதியத் தொடர்பு முறைகள், திருஅவையையும் பாதிக்கின்றன என்றுரைத்த பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டதற்கு, இறையியல் மற்றும், திருஅவை சார்ந்த காரணங்களும் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.   

அண்மையில் நடைபெற்ற உலக ஆயர் மாமன்றங்களில், நற்செய்தி அறிவிப்புப்பணி மற்றும், மறைக்கல்வி ஆகிய தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்றும், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, நற்செய்தியின் மகிழ்வு என்று பொருள்படும் Evangelii gaudium திருத்தூது அறிவுரை ஏட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டபோது, இந்த தலைப்பையும் எடுத்திருந்தார் என்றும், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

மறைக்கல்வி, நற்செய்தி அறிவிப்புப்பணியோடு ஒன்றிணைக்கப்படவேண்டும், இது, அதிலிருந்து பிரிக்கப்படக் கூடாது, ஏனெனில், இப்பணி, உயிர்த்த கிறிஸ்துவால் திருஅவையிடம் ஒப்படைக்கப்பட்ட பணி என்றும் வலியுறுத்திய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், திருஅவை, எல்லாக் காலத்திலும், பிரமாணிக்கத்துடன் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று கூறினார்.

திருஅவை என்றென்றும் தளராமல் அறிவிக்கவேண்டிய நற்செய்திப்பணிக்கு, இந்த புதிய மறைக்கல்வித் தொகுப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக, செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார், பேராயர் ஃபிசிக்கெல்லா. 

3 பகுதிகளையும், 12 பிரிவுகளையும் கொண்ட புதிய மறைக்கல்வித் தொகுப்பை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella, இந்த அவையின் செயலர், பேராயர் Octavio Ruiz Arenas, மறைக்கல்விக்கென நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி ஆயர் Franz-Peter Tebartz-van Elst ஆகியோர், செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2020, 14:29