திருத்தந்தையின் ஐக்கிய அரபு அமீரக திருத்தூதப் பயணம் 26082019 திருத்தந்தையின் ஐக்கிய அரபு அமீரக திருத்தூதப் பயணம் 26082019 

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கு அழைப்பு

அடிப்படை மத சுதந்திரத்தை நம் வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதிசெய்யும் நோக்கத்தில், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் பன்னாட்டு சமுதாயம், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, அடிப்படை மத சுதந்திரத்தை நம் வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதிசெய்யும் நோக்கத்தில்,  கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

“கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்: வழிபாட்டுத் தலங்களை ஒன்றுசேர்ந்து பாதுகாக்குமாறு” என்ற தலைப்பில், மே 01, இவ்வெள்ளியன்று, இரமதான் மாதம் மற்றும், ‘Id al-Fitr விழாவிற்கு, நல்வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நிலவும், ஒருவரையொருவர் உயர்வாகக் கருதுதல், மதித்தல், மற்றும், ஒத்துழைப்பு ஆகிய பண்புகள், இவ்விரு மதத்தவரின் உண்மையான நட்புறவை உறுதிப்படுத்தவும், இவ்விரு சமுதாயங்களும், வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும் என்ற நம்பிக்கையும், அச்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், ஏனைய மதங்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் மிகவும் முக்கியமானவை என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம் என்றும்,  அமைதி, சிந்தனை மற்றும், தியானம் செய்வதற்கு ஏற்ற இடங்களாக அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ள அச்செய்தி, ஆன்மீக விருந்தோம்பல் இடங்களாகவும் அவை அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும், திருமணங்கள், அடக்கச் சடங்குகள், சமுதாய விழாக்கள் போன்றவற்றில் மற்ற மதத்தினரும் பங்குபெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தி, 2016ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அஜர்பைஜான் நாட்டில் Heydar Aliyev (Baku) மசூதியில் உரையாற்றியதையும் எடுத்துரைக்கின்றது.

இந்த வழிபாட்டுத் தலத்தில் உடன்பிறந்த நட்புணர்வுடன் நாம் சந்திப்பது, ஒரு வல்லமையுள்ள அடையாளம் என்றும், பொறுப்பிலுள்ளவர்கள் மத்தியில் நிலவும் ஆள்-ஆள் உறவு மற்றும், நன்மனத்தின் அடிப்படையில், மதங்கள் ஒன்றுசேர்ந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும், திருத்தந்தை அச்சமயத்தில் உரையாற்றினார் என்று, அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் சில தீய மனிதர்கள், வழிபாட்டுத்தலங்களைத் தாக்கியிருப்பது குறித்தும், அல் அசார் இஸ்லாம் பெரிய குருவுடன் திருத்தந்தை கையெழுத்திட்ட மனித உடன்பிறந்தநிலை ஏடு குறித்தும் கூறியுள்ள அச்செய்தி, மதத்தினர், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு, ஒன்றிணைந்து முயற்சிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.  

இரமதான் மாதம் மற்றும், ‘Id al-Fitr விழாச் செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Miguel Angel Ayuso Guixot அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2020, 14:44