இயேசு சபை அருள்பணியாளர் Juan Antonio Guerrero Alves இயேசு சபை அருள்பணியாளர் Juan Antonio Guerrero Alves 

இலாப நட்ட கணக்கைவிட பணியாற்றுவது முக்கியம்

வத்திக்கான் நிதி நிலைமை என்று பேசும்போது, அதை, வெறும் இலாப, நட்டம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் காண்பது சரியல்ல - அருள்பணி Guerrero

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான், இலாப நட்ட கணக்குப் பார்க்கும் ஒரு தொழில் நிறுவனம் அல்ல. இது, மக்கள் வழங்கும் நன்கொடையில் இயங்கும் அமைப்பு என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருப்பீடத்தின் நிதித்துறையின் தலைவராக சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற இயேசு சபை அருள்பணியாளர் Juan Antonio Guerrero Alves அவர்கள், வத்திக்கான் செய்தித்துறைக்கு எழுத்து வடிவில் வழங்கிய ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட் 19 நெருக்கடியையொட்டி, திருப்பீடத்தின் அனைத்து துறைகளும் மேற்கொண்ட ஒரு சந்திப்பில், திருப்பீடத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து, அருள்பணி Guerrero அவர்கள் அளித்த விளக்கத்தை வைத்து, வத்திக்கான் நிதி நிலைமை மிகவும் சரிந்துவிட்டதாக செய்தியொன்று வெளியானதைத் தொடர்ந்து, வத்திக்கான் செய்தித்துறை அருள்பணி Guerrero அவர்களுடன் இந்த பேட்டியை மேற்கொண்டது.

உலகெங்கும் நிதி நிலைமை தடுமாறிவரும் வேளையில், வத்திக்கானும் அத்தகைய ஒரு நெருக்கடியைச் சந்திக்கிறது என்பதை தன் பேட்டியில் தெளிவாகக் குறிப்பிட்ட அருள்பணி Guerrero அவர்கள், நிதி நிலைமை என்று பேசும்போது, அதை, வெறும் இலாப, நட்டம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் காண்பது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

திருப்பீடம் ஒரு பணியில் ஈடுபட்டுள்ளது என்பதால், அதன் செயல்பாடுகளை, கூடுதல் நிதியிருப்பு என்ற அளவுகோல் கொண்டு சிந்திக்கக்கூடாது என்றும், வத்திக்கானின் நிதித் துறை, ஒளிவு மறைவற்ற முறையில் தன் செயல்பாடுகளை நிகழ்த்துவது அதன் முக்கிய குறிக்கோள் என்றும் அருள்பணி Guerrero அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

2016ம் ஆண்டு முதல், 2020ம் ஆண்டு வரை, திருப்பீடத்தின் வரவும், செலவும் நிலையான ஓர் அளவில் இயங்கிவருவதாகத் தெரிவித்த அருள்பணி Guerrero அவர்கள், ஒவ்வோர் ஆண்டும், இத்தாலிய அரசுக்கு திருப்பீடம் 17 மில்லியன் யூரோக்கள், அதாவது, 1 கோடியே 70 இலட்சம் யூரோக்கள் வரி செலுத்தி வருகிறது என்பதையும் தெரிவித்தார்.

திருத்தந்தையின் உரைகள், செயல்பாடுகள் அனைத்தையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் வத்திக்கான் சமூகத் தொடர்புத் துறை, உலகெங்கும் செயல்படும் திருப்பீடத் தூதரகங்கள் ஆகியவை, எவ்வகையிலும் வருமானம் ஈட்டாத துறைகள் என்றும், ஆனால், அவை மேற்கொள்ளும் பணிகள், திருப்பீடத்திற்கு மிகவும் முக்கியமான பணிகள் என்றும் நிதித்துறையின் தலைவர், அருள்பணி Guerrero அவர்கள் தன் பேட்டியில் விளக்கமளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2020, 15:28