கர்தினால் Miguel Ángel Ayuso Guixot கர்தினால் Miguel Ángel Ayuso Guixot  

கர்தினால் அயூசோ - உலகம் தன் பழைய நிலைக்குத் திரும்பாமல்...

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் ஆபத்து நீங்கியதும், இவ்வுலகம் மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்பாமல், உன்னதமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவியப் பரவல் என்ற ஆபத்து நீங்கியதும், இவ்வுலகம் மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்பாமல், இன்னும் உன்னதமான ஒரு மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

"கோவிட் 19 உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்ள மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு" என்ற தலைப்பில், ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு காணொளி கருத்தரங்கில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

நாம் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள் என்பதையும், நம் வாழ்வும், நம் குழுமங்களின் வாழ்வும் அடுத்தவர்களிடமிருந்து பிரிக்கமுடியாதது என்பதையும் இந்நாள்களில் நாம் உணர்ந்துவருகிறோம் என்பதை எடுத்துரைத்த கர்தினால் அயூசோ அவர்கள், ஒன்றிப்பு, ஆதரவு, உடன்பிறந்த நிலை என்ற மூன்று கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மக்கள் யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்த புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மார்ச் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்பு செப வழிபாட்டின் ஒரு சில பகுதிகளை, தன் உரைக்கு முன்னர் காண்பித்த கர்தினால் அயூசோ அவர்கள், இவ்வுலகமே புயல் சூழ்ந்த ஒரு கடலில் பயணம் செய்யும் படகைப்போல் உள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டதை, தன் உரையில் நினைவுறுத்தினார்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தை நிறுத்தமுடியும் என்பதை உணர்ந்துள்ள இவ்வேளையில், நம்மிடையே இன்னும் பல்வேறு வடிவங்களில் நிலவும் வேறுபாடுகளைக் களைய, இது தகுந்த தருணம் என்று, கர்தினால் அயூசோ அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மேலும், மே 14ம் தேதி, வியாழனன்று உலகெங்கும் வாழும் அனைத்து மக்களையும் செபம், உண்ணா நோன்பு மற்றும் பிறரன்புச் செயல் ஆகியவற்றில் இணைவதற்கு, திருத்தந்தையும், இஸ்லாமிய அல் அசார் தலைவரும், உடன்பிறந்த நிலை உயர் மட்டக் குழுவும் விடுத்துள்ள அழைப்பைப் பற்றி மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தி, கர்தினால் அயூசோ அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 14:39