தேடுதல்

Vatican News
பேராயர் ஈவான் யூர்க்கோவிச் பேராயர் ஈவான் யூர்க்கோவிச்  

மிகவும் நலிவுற்ற மக்களை மறந்துவிடக்கூடாது - திருப்பீடம்

தற்போது நிலவும் கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய நெருக்கடி நிலையின் விளைவாக, உலகின் பல வறிய நாடுகளில் பட்டினியும், நிலையற்ற பொருளாதாரமும் மக்களின் வாழ்வை வெகுவாக சீர்குலைக்கும் - பேராயர் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவல் உருவாக்கியுள்ள நெருக்கடி காலத்தில், மிகவும் நலிவுற்ற மக்களை மறந்துவிடக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

உலக நலவாழ்வு நிறுவனமான WHO அமைப்பு, மே 18, 19 ஆகிய இருநாள்கள், இணையதள நேரடி ஒளிபரப்பு வழியாக ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறினார்.

தற்போது நிலவும் உலகளாவிய நெருக்கடி நிலையின் விளைவாக, உலகின் பல வறிய நாடுகளில் பட்டினியும், நிலையற்ற பொருளாதாரமும் மக்களின் வாழ்வை வெகுவாக சீர்குலைக்கும் என்ற எச்சரிக்கையை பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இந்த நேரடி ஒளிபரப்பில் விடுத்தார்.

உலகெங்கும் இயங்கிவரும் 5000த்திற்கும் அதிகமான கத்தோலிக்க மருத்துவ மனைகளும், 16000த்திற்கும் அதிகமான நலப்பணி மையங்களும் ஒவ்வொரு நாட்டின் அரசுகளுக்கு உதவி வருகின்றன என்பதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், உலகின் பல நாடுகளில் இந்த தொற்றுக்கிருமியின் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் கத்தோலிக்க அருள்பணியாளரும் துறவியரும் முன்னிலையில் இருந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த கத்தோலிக்க நிறுவனங்களுக்கு நிதி உதவிகள் தேவைப்படும் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், WHO நிறுவனத்திற்கு அவசரக்கால நிதி உதவி வழங்க முன்வந்திருப்பதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டி, உலக நலவாழ்வு நிறுவனத்தின் பணிகளை திருப்பீடம் பெருமளவு ஆதரிக்கின்றது என்பதை எடுத்துரைத்தார்.

இந்த நெருக்கடி நேரத்தில், உலகெங்கும் போர் நிறுத்தங்கள் நிகழவும், வறுமைப்பட்ட நாடுகளின் கடன் சுமை நீக்கப்படவும் உலக அரசுகள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பங்களை, திருப்பீடம் முழுமையாக ஆதரிக்கின்றது என்பதையும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் கூறினார்.

20 May 2020, 14:50