சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

"இடுக்கண் வேளையில் உறுதியாக" செபங்கள் அடங்கிய நூல்

இன்றைய இக்கட்டானச் சூழலில், உறுதுணையாக இருக்கும் வண்ணம், திருத்தந்தையின் மறையுரைகள், சிந்தனைகள் மற்றும் செபங்கள் அடங்கிய ஒரு நூலை திருப்பீடத்தின் தகவல்தொடர்பு அவை, வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய இக்கட்டானச் சூழலில், உறுதுணையாக இருக்கும் வண்ணம், திருத்தந்தையின் மறையுரைகள், சிந்தனைகள் மற்றும் செபங்கள் அடங்கிய ஒரு நூலை திருப்பீடத்தின் தகவல்தொடர்பு அவை, வெளியிட்டுள்ளது.

PDF எனப்படும் வலைத்தளத்தின் வழியே பதிவிறக்கம் செய்யக்கூடிய நூல் வடிவில், “Strong in the Face of Tribulation”, அதாவது, "இடுக்கண் வேளையில் உறுதியாக" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்நூலை, இணையதளத்திலிருந்து இலவசமாக அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீமைகளை அழிப்பவராகவும், கடினமானச் சூழல்களில் உதவியாளராகவும் கருதப்படும், தலைமைத் தூதரான மிக்கேல் அவர்களின் உருவம் அட்டைப்படத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், இடுக்கண் நிறைந்த இவ்வேளையில் இறைவனின் இருப்பை அருகில் உணர இந்நூல் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில், கடினமான நேரங்களில் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு மன்றாட்டுக்கள், வழிபாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன. இப்பகுதி, நோயுற்றோருக்கு வழங்கப்படும் ஆசீர், தீமைகளிலிருந்து விடுதலை பெறும் ஆசீர் ஆகியவற்றுடன் நிறைவு பெறுகிறது.

இரண்டாவது பகுதியில், வழிபாடுகளும், அருளடையாளங்களும் நேரடியாகக் கிடைக்காத இக்காலத்தில், ஆன்மீக அளவில் திருவிருந்தில் பங்குபெறுதல், ஆன்மீக வழியில் ஒப்புரவு அருளடையாளத்தையும், பாவமன்னிப்பையும் பெறுதல் ஆகியவற்றைக் குறித்த வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது பகுதியில், இந்த நெருக்கடியான காலத்தில், மார்ச் 9ம் தேதி முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கி வந்துள்ள மறையுரைகள், அல்லேலூயா வாழ்த்தொலி உரை, மற்றும் அவர் வழங்கியுள்ள ஏனைய சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

“Strong in the Face of Tribulation” என்ற நூலை, ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய, பின்வரும் முகவரியைச் சொடுக்கவும்:

https://www.vaticannews.va/content/dam/lev/forti-nella-tribolazione/pdf/eng/strong-in-tribulation.-20042020.pdf

இந்த டிஜிட்டல் நூலானது, அவ்வப்போது, புதிய இணைப்புகளுடன் புதிப்பிக்கப்பட்டவண்ணம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10, புனித வெள்ளியன்று புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்திய சிறப்புச் சிலுவைப்பாதை நூலை, ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய, பின்வரும் முகவரியைச் சொடுக்கவும்:

https://www.vaticannews.va/content/dam/lev/via-crucis/pdf/the-way-of-the--cross.pdf

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2020, 14:41