தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் 

புனித வார வழிபாட்டு நிகழ்வுகள், சைகை மொழியில்...

வத்திக்கானில் நடைபெறும் புனித வார வழிபாட்டு நிகழ்வுகளில், கேட்கும் திறன், மற்றும், தொடர்புகொள்ளும் திறன் குறைந்தோரும் பங்கேற்கும் வகையில், இந்நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு, சைகை மொழியிலும் இடம்பெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் நடைபெறும் புனித வார வழிபாட்டு நிகழ்வுகளில், கேட்கும் திறன், மற்றும் தொடர்புகொள்ளும் திறன் குறைந்தோரும் பங்கேற்கும் வகையில், இந்நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு, சைகை மொழியிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடியால் இல்லங்களில் இருந்தவண்ணம் புனித வார நிகழ்வுகளில் பங்கேற்க ஒவ்வொரு குடும்பமும் இணைந்து வரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, இல்லங்களில், செவித்திறன் குறைவுள்ளவர்களும் பங்கேற்கும் வகையில், வத்திக்கான் செய்தித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

மார்ச் 27ம் தேதி புனித பேதுரு வளாகத்தில் நிகழ்ந்த சிறப்பு செப நிகழ்வை உலகிலுள்ள அனைவரும் கண்டு பயன்பெறும் வண்ணம், இத்தாலிய ஆயர் பேரவையின் மாற்றுத்திறனாளிகள் மறைக்கல்வி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர், அருள்சகோதரி வெரோனிக்கா தோனத்தெல்லோ (Veronica Donatello) அவர்கள், சைகை மொழயில், திருத்தந்தையின் இச்செப நிகழ்வை விளக்கிக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, வத்திக்கானிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் புனித வார நிகழ்வுகளை, அருள்சகோதரி தோனத்தெல்லோ அவர்கள், TV2000 நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், சைகை மொழியில் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனித வார வழிபாட்டு நிகழ்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:

ஏப்ரல் 9, புனித வியாழன் மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், சிறப்புத் திருப்பலி.

ஏப்ரல் 10, புனித வெள்ளி மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், இயேசுவின் பாடுகள் வழிபாடு.

புனித வெள்ளி இரவு 9 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலின் முன்புறத்தில், சிலுவைப்பாதை பக்தி முயற்சி.

ஏப்ரல் 11, புனித சனிக்கிழமை, இரவு 9 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு.

ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, காலை 11 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்புத் திருப்பலியும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை வழங்கும் 'ஊர்பி எத் ஓர்பி' (Urbi et Orbi) சிறப்புச் செய்தியும், சிறப்பு ஆசீரும் இடம்பெறும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்தும், உரோம் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2020, 14:15