திருப்பீட அதிகாரிகள் சந்திப்பு 21.122019 (கோப்புப்படம்) திருப்பீட அதிகாரிகள் சந்திப்பு 21.122019 (கோப்புப்படம்) 

"Papal Chapel" உறுப்பினர்களின் உதவிக்கு அழைப்பு

உலகளாவிய பிறரன்பு குழுமத்திற்குத் தலைமை தாங்கும், உரோம் ஆயராகிய திருத்தந்தையுடன், சிறப்பு ஒன்றிப்பு மற்றும், நெருக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக, "Papal Chapel" உறுப்பினர்கள் துன்புறும் மக்களுக்கு உதவுமாறு விண்ணப்பம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசு மாசற்றவராய் இருந்தும், அவர் எவ்வாறு மிகக் கொடூரமாய் வதைக்கப்பட்டார் மற்றும் தீர்ப்பிடப்பட்டார் என்பதற்கு, தவக்காலத்தின் இந்நாள்களில் நாம் சான்று பகர்ந்து வருகிறோம் என்று, இச்செவ்வாயன்று தன் முதல் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்   

ஏப்ரல் 07, இச்செவ்வாயன்று, #தவக்காலம், #சேர்ந்து செபிப்போம் ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், அநியாயத் தீர்ப்புக்களால் துன்புறும் அனைத்து மக்களுக்காகவும் இன்று நாம் எல்லாரும் இறைவனை மன்றாடுவோம், ஏனெனில், இவர்கள் மீது, யாரோ அநீதியாகத் தீர்ப்பிட்டனர் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.  

டுவிட்டர்கள்

அடுத்து, இச்செவ்வாயன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நாம் எல்லாரும் பாவிகள், வாழ்வில் தவறி விழும் நேரங்கள் எப்போதும் உண்டு, ஆயினும், கடவுள்முன் நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதே முக்கியம், பணிபுரிவதில் உறுதியாயிருப்பதற்கும், தவறும்போது, பேதுருபோல் அழுவதற்கும் ஆண்டவரிடம் வரம் வேண்டுவோம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், “இந்த புனித நாள்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவின்முன் நிற்போம், பணியாற்றும்பொருட்டு வாழ்வதற்கென அவரின் அருளைக் கேட்போம், துன்புறுவோர் மற்றும், அதிகத் தேவையில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவோம், நமக்கு என்ன குறைவுபடுகின்றது என்பதை நோக்காமல், மற்றவர்க்கு நம்மால் என்ன நன்மை புரிய முடியும் என்பதில் அக்கறை காட்டுவோம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

கர்தினால் Krajewski உதவிக்கு அழைப்பு

மேலும், கொரோனா தொற்றுக் கிருமியால் துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள் மீது, ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, உதவிக்குக் கேட்டு விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தையின் தர்மக் காரியங்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.

திருஅவையின் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில், திருத்தந்தை நிறைவேற்றும் திருவழிபாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் அவருக்கு உதவும், "Papal Chapel" அமைப்பின், ஏறத்தாழ 250 கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்கு, ஏப்ரல் 06, இத்திங்களன்று கர்தினால் Krajewski அவர்கள் அனுப்பிய மடலில், இந்தப் புனித வாரத்தில் ஒருமைப்பாட்டின் செயல் ஒன்றை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“Pontificalis Domus” என்ற திருத்தந்தை தன் சொந்த விருப்பத்தால் வெளியிடும் அறிக்கையின்படி, கோவிட்-19 கொள்ளை நோயால், இப்புனித வாரத்தில் திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாடுகள், Papal Chapel அமைப்பைச் சேர்ந்தவர்களின்றி நிறைவேற்றப்படும் என்பதால், இத்தாலியிலும், வத்திக்கானிலும் இந்நாள்களில் துன்புறும் மக்களுக்கு உதவுமாறு, கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.

உலகளாவிய பிறரன்புக்குத் தலைமை தாங்கும், உரோம் ஆயராகிய திருத்தந்தையுடன், சிறப்பு ஒன்றிப்பு மற்றும், நெருக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக, துன்புறும் மக்களுக்கு உதவுமாறும், இந்த அமைப்பினர் சேகரிக்கும் தர்மங்களைப் பெறுகின்றவர்கள் குறித்த விவரங்களை, திருத்தந்தை பின்னாளில் அறிவிப்பார் என்றும், கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2020, 14:08