தேடுதல்

அதிசய சிலுவை முன் திருத்தந்தை அதிசய சிலுவை முன் திருத்தந்தை  

அற்புதச் சிலுவையின் கீழ், புனித வாரக் கொண்டாட்டங்கள்

புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள இந்த அற்புதச் சிலுவை, 1522ம் ஆண்டு, பேதுரு ஆலயம் நோக்கிப் பவனியாகக் கொண்டுசெல்லப்பட்ட வேளையில், அதைப் பார்த்த நொடியே மக்கள் குணம்பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொற்றுக்கிருமி உயிர்க் கொல்லி நோய், பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்ற இந்தத் துன்ப நேரத்தில், புனித வாரக் கொண்டாட்டங்களை உரோம் நகரின் புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் உள்ள அற்புதச் சிலுவையின் கீழ், புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 15-ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமை நகரின் புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் உள்ள அற்புதச் சிலுவையிடம்  இந்தக் கொள்ளை நோயிலிருந்து இத்தாலி நாட்டையும் உலக நாடுகளையும் காப்பாற்ற வேண்டி செபித்ததும்,  புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அச்சிலுவையைக் கொணர்ந்து அங்கே வைத்து மார்ச் 27ம் தேதியன்று மழையிலும் நனைந்து வந்து, மக்கள் நலனுக்காக இந்த அற்புத சிலுவை முன் மனமுருகச் செபித்ததும் குறிப்பிடத்தக்கது.

உரோமை நகரில் உள்ள பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான புனித மர்ச்செல்லோ ஆலயத்தில் 15-வது நூற்றாண்டில் செய்யப்பட்ட மரத்தாலான, அழகிய திருச்சிலுவையான இது, இவ்வாலயம் 1519ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்து முழு ஆலயமும் சாம்பலானபோதிலும், இந்த சிலுவை மட்டும் அப்படியே எந்தவித பாதிப்பும் அடையாமல் இருந்ததும், அதன் அடியில் ஒரு சிறிய எண்ணெய் விளக்கு எறிந்து கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா தொற்றுக்கிருமி போன்ற மிகப் பெரிய கொள்ளை நோய் உரோமை நகர் எங்கும் பரவி, பலர் இறந்து. உரோமை நகரமே துன்பத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் திருத்தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் புனித மர்ச்செல்லோ ஆலயத்தின் அதிசயச் சிலுவையானது 1522ம் ஆண்டு ஆகஸ்டு 4 முதல் 20ம் தேதி வரை, ஏறத்தாழ 16 நாட்கள் உரோமை நகரத்தின் முக்கியமான வீதிகள் வழியாக புனித பேதுரு ஆலயம் நோக்கிப் பவனியாகக் கொண்டுசெல்லப்பட்ட வேளையில். இந்த அதிசயச் சிலுவை கடக்கின்றபொழுது அதைப் பார்த்த நொடியே மக்கள் குணம்பெற்றதாக வரலாறு கூறுகின்றது.

கி.பி 1600ம் ஆண்டிலிருந்து, “புனித ஆண்டு” அல்லது யூபிலி ஆண்டு கொண்டாடப்படும் ஒவ்வொரு முறையும் இந்த அதிசயச் சிலுவை, புனித பேதுரு பெருங்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்களுடைய ஆராதனைக்காக வைக்கப்படுவது இன்றும் வழக்கமாக இருக்கின்றது.

1522ம் ஆண்டு ஏற்பட்ட கொள்ளை நோய் போன்றே இன்றும் இந்த கோவிட்-19 நோயால் துன்புற்றிருக்கும் இந்த உலகை காப்பாற்ற வேண்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார பாஸ்கா கால கொண்டாட்டங்களை, இந்த அதிசய சிலுவையின் கீழ் சிறப்பித்து வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2020, 13:21