திருவிருந்தின் அடையாளங்கள் திருவிருந்தின் அடையாளங்கள் 

"ஆன்மீகத் திருவிருந்து" - அருள்பணி லொம்பார்தி கட்டுரை

ஆன்மீக வழியில் திருவிருந்தில் பங்கு கொள்வது, இயேசுவுடன் நாள் முழுவதும் கொள்ளும் உறவுக்கு அடித்தளமாக அமைகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆன்மீக வழியில் திருவிருந்தில் பங்கு கொள்வது, நேரடியாக, திருப்பலியில் கலந்துகொண்டு திருவிருந்தில் பங்கேற்பதற்கு இணையல்ல என்றாலும், தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் நிலவும் கட்டுப்பாடுகள் காலத்தில், இயேசுவோடு நம்மை இணைப்பதற்கு இது சிறந்த வழி என்று இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

"நெருக்கடி நிலையின் நாளேடு" (Diary of the crisis) என்ற தொடரை, வத்திக்கான் செய்தித்துறையுடன் பகிர்ந்துகொண்டு வரும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், இத்தொடரின் முதல் பதிவாக, 'நிறைந்து வழியும் சதுக்கமும், காலியான சதுக்கமும்' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்ததையடுத்து, "ஆன்மீகத் திருவிருந்து" என்ற தலைப்பில் தன் இரண்டாவது கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் திருத்தந்தையும், இன்னும் பல ஆயர்களும், அருள்பணியாளர்களும், தொலைக்காட்சி அல்லது, வேறு ஊடகங்கள் வழியே திருப்பலி நிறைவேற்றுவதைக் காணும் மக்கள், இத்திருப்பலிகளில், ஆன்மீக வழியில் திருவிருந்தில் பங்கேற்கும் அனுபவத்தைப் பெற்று வருகிறார்கள் என்று கூறும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், இந்த பங்கேற்பு, இயேசுவுடன் நாள் முழுவதும் கொள்ளும் உறவுக்கு அடித்தளமாக அமைகிறது என்று தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

2011ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் மத்ரீத் நகரில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில், அங்கு, திடீரென இரவில் பெய்த பெருமழையில், திடலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் வீழ்ந்து, இறுதித் திருப்பலிக்கென தயாராக வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 20 இலட்சம் நற்கருணை அப்பங்கள் மழையில் நனைந்துவிட்டன என்ற நிகழ்வை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், அடுத்த நாள் நிகழ்ந்த இறுதி திருப்பலியில், ஒரு சில பிரதிநிதிகள் மட்டும் நேரடியாக திருவிருந்தில் கலந்துகொண்டனர் என்பதையும், மற்ற ஆயிரக்கணக்கான இளையோர் ஆன்மீக வழியில் திருவிருந்தில் கலந்துகொண்டனர் என்பதையும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வால், பலர், துவக்கத்தில், மனமுடைந்து போயினர் எனினும், சரியான விளக்கங்கள் கூறப்பட்டு, நாளடைவில் மக்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர் என்பதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டு, தற்போது நிலவும் இன்றையச் சூழலையும் மக்கள் மெல்ல, மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருவிருந்திற்கென உண்ணா நோன்பு இருந்து திருவிருந்தில் பங்கேற்ற பலர், தற்போது, திருவிருந்து என்ற விண்ணக உணவே இன்றி நோன்பு இருப்பதை தன் கட்டுரையில் எடுத்துரைக்கும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், நல்லதொரு கருத்துக்காக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நோன்பும் இறைவனுக்கு ஏற்புடையது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2020, 14:52