திருத்தந்தை முதலாம் ஜான் பால் திருத்தந்தை முதலாம் ஜான் பால் 

"திருத்தந்தை முதலாம் ஜான்பால் இன்றும் அர்த்தமுள்ளவர்"

திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களின் பணிக்காலம் மிகக் குறுகியது என்றாலும், அதன் தாக்கம் நீண்டது - புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் பெயரால், வத்திக்கானில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதையடுத்து, இவ்வறைக்கட்டளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில், ஏப்ரல் 28, இச்செவ்வாயன்று கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார்.

"திருத்தந்தை முதலாம் ஜான்பால் வத்திக்கான் அறக்கட்டளையின் பிறப்பு - திருத்தந்தை லூச்சியானி இன்றும் அர்த்தமுள்ளவர்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில், திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களின் பணிக்காலம் மிகக் குறுகியது என்றாலும், அதன் தாக்கம் நீண்டது என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் கூறிய சொற்களை, கர்தினால் பரோலின் அவர்கள், இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

தன் மக்களுக்கு மிக நெருக்கமாக வாழ்ந்த ஒரு மேய்ப்பராக விளங்கிய அல்பீனோ லூச்சியானி (Albino Luciani) அவர்கள், சமுதாயத்தைக் குறித்த மென்மையான உணர்வையும், உறுதியான நம்பிக்கை உணர்வையும் இணைத்து வாழ்ந்தவர் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் வழங்கிய கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வத்துடன் தன் பணியைத் துவக்கிய திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், திருஅவையின் எளிமை, பல் சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதை, கர்தினால் பரோலின் அவர்களின் கட்டுரை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி, திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், மத்தியக் கிழக்குப் பகுதியில், உறுதியான அமைதியை உருவாக்க, அப்பகுதியில் உள்ள அனைத்து அரசுத்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்ததை, தன் கட்டுரையில் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், உலக அமைதிக்கென அழைப்பு விடுத்த திருத்தந்தையர் 23ம் யோவான், 6ம் பவுல் ஆகிய தன் முன்னோரின் வழியில், திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களும் உழைத்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் எழுதியுள்ளவை, உரைகளாக வழங்கியவை அனைத்தையும் பாதுகாக்கவும், அவரது வாழ்வையும், தலைமைப்பணியையும் ஆய்வு செய்யவும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை முனைப்புடன் செயலாற்றும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2020, 14:49