கர்தினால் டர்க்சன் Gemelli மருத்துவமனை சந்திப்பு கர்தினால் டர்க்சன் Gemelli மருத்துவமனை சந்திப்பு 

கர்தினால் டர்க்சன் Gemelli மருத்துவமனை சந்திப்பு

இந்த நெருக்கடியான சூழலில், மனித உயிர்களைக் காப்பாற்றப் பணியாற்றிவரும் Agustino Gemelli மருத்துவமனைக்கு, முப்பது முதல் ஐம்பது சுவாசக் கருவிகளை திருத்தந்தை வழங்கவுள்ளார்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் இயங்கும் Agostino Gemelli மருத்துவமனையிலுள்ள கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சைகள் வழங்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பையும், ஆறுதலையும்  தெரிவித்தார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஏப்ரல் 03, இவ்வெள்ளி மாலையில் Gemelli மருத்துவமனைக்குச் சென்ற, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தொற்றுக் கிருமி நோயாளிகளைப் பராமரிப்பதற்குத் தங்களை அர்ப்பணித்துள்ள மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்து, திருத்தந்தையின் தோழமையுணர்வைத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலர் பேரருள்திரு Segundo Tejado Muñoz, அருள்பணி Nicola Riccardi ஆகிய இருவருடன், Gemelli மருத்துவமனைக்குச் சென்ற கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்த தொற்றுக்கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் தனியாய் இல்லை என்றும், திருஅவை உங்களுடன் இருக்கின்றது என்றும் கூறினார்.

இச்சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிர்வதித்த செபமாலைகளை வழங்கிய கர்தினால் டர்க்சன் அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமி தாக்கியுள்ள சூழலில், Gemelli மருத்துவமனை சிறப்பாகப் பணியாற்றி வருவதைப் பாராட்டினார்.

சுவாசக் கருவிகள்

இத்தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்ட நோயாளிகள் மற்றும், அக்கிருமியால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு, திருத்தந்தையின் ஆறுதலையும், செபங்களையும் தெரிவித்த கர்தினால், இந்த முக்கியமான சூழலில் மனித உயிர்களைக் காப்பாற்றப் பணியாற்றிவரும் Agustino Gemelli மருத்துவமனைக்கு, முப்பது முதல் ஐம்பது சுவாசக் கருவிகளை திருத்தந்தை வழங்கவுள்ளார் என்பதையும் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2020, 14:32