தேடுதல்

Vatican News
புனித பூமி புனித பூமி 

புனித பூமிக்கென எடுக்கப்படும் உண்டியல் நாள் தள்ளி வைப்பு

புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ சமுதாயம், எப்போதும் போலவே இப்போதும் அதே நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றது. உலகிலுள்ள விசுவாசிகளின் தாராளம் நிறைந்த ஒருமைப்பாடு அவர்களுக்குத் தேவைப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கென, ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று எடுக்கப்படும் உண்டியல் நாள், வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று, கீழை வழிபாட்டுமுறை பேராயம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2, இவ்வியாழனன்று இது குறித்து அறிக்கை வெளியிட்ட, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழாவுக்கு முந்திய நாளாகிய செப்டம்பர் 13, ஞாயிறன்று புனித பூமிக்கென உண்டியல் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு, இந்த நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.    

தற்போதைய கோவிட்-19 நெருக்கடியினால் இந்த நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வாண்டு புனித வாரத்தில் விசுவாசிகளின் பங்கேற்புடன் திருவழிபாடுகள் நடைபெறாது என்பதால், இந்த ஏற்பாடு என்றும், கர்தினாலின் அறிக்கை தெரிவிக்கின்றது.

புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ சமுதாயம், எப்போதும் போலவே இப்போதும் அதே நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றது என்றும், உலகிலுள்ள விசுவாசிகளின் தாராளம் நிறைந்த ஒருமைப்பாடு அவர்களுக்குத் தேவைப்படுகின்றது என்றும், இதன் வழியாக, அம்மக்கள், தொடர்ந்து நற்செய்தியின் சான்றுகளாக வாழ இயலும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகிலுள்ள கிறிஸ்தவர்களின் தாராளப் பண்பால், புனித பூமியிலுள்ள வறியோர் மற்றும் ஏனைய பிறரன்பு அமைப்புகளும், பள்ளிகளும் தொடர்ந்து செயல்படும் எனவும், கர்தினால் சாந்த்ரி அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

வத்திக்கான் நீதிமன்றத்தின் பணிகள்

மேலும், வத்திக்கான் நீதிமன்றத்தின் பணிகள் ஏப்ரல் 3, இவ்வெள்ளியன்று மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவிட்-19 கிருமி முன்வைத்துள்ள அச்சுறுத்தலில், அந்த நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் ஒப்புதலில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஆணையின்படி, வத்திக்கான் நீதிமன்றத்தின் பணிகள், வருகிற மே மாதம் 4ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

03 April 2020, 12:34