தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்  

விசுவாசத்தின் மனிதராக வாழ்ந்த புனித திருத்தந்தை

எத்தனை உடல் வேதனைகள் வந்தபோதிலும், திருத்தந்தை புனித ஜான் பால் அவர்கள், தன் மனஅமைதியை இழந்து விடவில்லை, ஏனெனில், எப்போதும் அவர் கண்முன்னே அவரின் வாழ்வின் நோக்கம் இருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

விசுவாசம் குறைந்து காணப்படும் இன்றைய உலகில், உறுதியுடைய நம்பிக்கையாளராக, அதிலும், விசுவாசத்தால் ஒளியூட்டப்பட்ட வாழ்வுப்பாதையைக் கொண்டவராக புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இருந்தார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

15ம் ஆண்டு நினைவு

புனிதத் திருத்தந்தை ஜான் பால் அவர்கள் இறந்ததன் 15ம் ஆண்டு நினைவு, ஏப்ரல் 2, இவ்வியானன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் வானொலியில் தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட வத்திக்கான் நகரின் பொறுப்பாளராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்ஜெலோ கொமாஸ்திரி அவர்கள், விசுவாசத்தின் மனிதராகவும், அமைதியை தன்னுள் கொண்டிருந்தவராகவும், மகிழ்வு நிறைந்தவராகவும் புனிதத் திருத்தந்தை இருந்தார் என்று கூறினார்.

கொரோனா தொற்றுநோயால் இவ்வுலகம் பெரிய அளவில் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம், நம் விசுவாசக்குறைவே என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் கொமாஸ்திரி அவர்கள், இன்று பலரில் ஆன்மீக வெற்றிடம் காணப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

கடவுள் ஏற்பாடு செய்துள்ள விருந்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம், அதற்காக நாம் தயாரித்து வருகிறோம் என்பதை முற்றிலும் உணர்ந்தவராக புனித ஜான் பால் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார் என்பதையும் தன் நேர்முகத்தில் குறிப்பிட்ட கர்தினால் கொமாஸ்திரி அவர்கள், அன்பே நிறைந்தவராக இறைவனின் விருந்தில் பங்குகொள்ள நாம் அனைவரும் நம் வீண்பெருமைகள் மற்றும் சுயநலங்களை விட்டு விலகி நம்மை தயாரிக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

மனஅமைதியை இழக்காத 2ம் ஜான் பால்

எத்தனை உடல் வேதனைகள் வந்தபோதிலும், அவர் சுடப்பட்டபோதும்கூட, திருத்தந்தை புனித ஜான் பால் அவர்கள், தன் மனஅமைதியை இழந்து விடவில்லை, ஏனெனில், எப்போதும் அவர் கண்முன்னே அவரின் வாழ்வின் நோக்கம் இருந்தது என்றார் கர்தினால் கொமாஸ்திரி.

இன்றைய மனிதகுலம், தன் துன்பங்களையும் தாண்டிப் பார்க்கும் சக்தியை இழந்துள்ளதாலேயே, வேதனையிலும், மனத்தளர்ச்சியிலும் வாழ்ந்து வருகின்றது  என கர்தினால் கொமாஸ்திரி அவர்கள் மேலும் கூறினார்.

அன்னைமரியாவிடம் ஆழ்ந்த நம்பிக்கை

'அன்னை மரியாவே, நான் முற்றிலும் உம்முடையவர்' என்பதை தன் தலைமைப் பணிவாழ்வின் விருதுவாக்காகக் கொண்டிருந்த புனிதத் திருத்தத்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அன்னைமரியாவின் வழிநடத்தலில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார், என்றார் கர்தினால் கொமாஸ்திரி.

இதற்கிடையே, இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், போலந்து மக்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிடுகையில், இந்த கோவிட்-19 தொற்றுநோய் துன்ப காலத்தில், இறை இரக்கத்திலும், புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையிலும் முழு நம்பிக்கை வைப்போம் என்ற அழைப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

02 April 2020, 14:06