கர்தினால் ஜார்ஜ் பெல் கர்தினால் ஜார்ஜ் பெல்  

கர்தினால் பெல் அவர்களை விடுவித்த உயர் நீதிமன்றம்

தன் மீது குற்றம் சுமத்தியவர் மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லையெனவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது எனவும் உரைத்துள்ளார் கர்தினால் பெல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சிறார்களுடன் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றசாட்டின்பேரில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சிறை வைக்கப்பட்டிருந்த கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை, குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என, ஒரு மனதாகத் தீர்ப்பளித்து அவரை  ஏப்ரல் 07, இச்செவ்வாயன்று விடுவித்துள்ளது ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைவைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்டில் தன் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற விண்ணப்பமும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், கர்தினாலின் மேல்முறையீட்டை ஏற்று ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மெல்பர்னிலுள்ள துறவுமடம் ஒன்றிற்குச் சென்றுள்ள கர்தினால் பெல் அவர்கள், தன் மீது குற்றம் சுமத்தியவர் மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லையெனவும், தான் குற்றமற்றவர் என தொடர்ந்து போராடி வந்தது தற்போது பலனைத் தந்துள்ளது எனவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

தனக்காகச் செபித்தவர்கள், மற்றும், தன் விடுதலைக்காக உழைத்தவர்கள் போன்ற அனைவருக்கும் தன நன்றியை வெளியிடுவதாக உரைத்த கர்தினால் பெல் அவர்கள், இன்றையச் சூழலில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்போர், மற்றும், அவர்களுடன் பணிபுரியும் மருத்துவத்துறையினருக்காக, தனிப்பட விதத்தில் செபிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2020, 14:35