கோவிட்-19-வெனெசுவேலா கோவிட்-19-வெனெசுவேலா 

நீர் வளங்கள் பாதுகாக்கப்பட முயற்சிகள் அவசியம்

தண்ணீர், உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்துவதோடு தொடர்புள்ள வல்லமைமிக்க ஓர் ஆன்மீக அடையாளம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இப்பூமிக்கோளத்தின் நீர் வளங்கள் பாதுகாக்கப்படுவது மற்றும், மனிதர் எல்லாருக்கும் சுத்தமான தண்ணீர் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Aqua fons vitae அதாவது, தண்ணீர் வாழ்வின் ஊற்று என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏடு, இப்பூமியில், திடப்பொருள், திரவம் மற்றும் வாயு வடிவங்களில், இயற்கையாகவே கிடைக்கும் ஒரே பொருள் தண்ணீர் என்றும், தண்ணீரின்றி இப்பூமிக்கோளத்தில் வேறு வாழ்வே இல்லை என்றும் கூறுகிறது.

தண்ணீர், உடலையும், ஆன்மாவையும், தூய்மைப்படுத்துவதோடு தொடர்புள்ள வல்லமைமிக்க ஓர் ஆன்மீக அடையாளம் என்றும், திருமுழுக்கு, கடவுள் அருளின் அடையாளமாக விளங்குகிறது என்றும், தண்ணீரால் வழங்கப்படும் திருமுழுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, ஆன்மீக மறுபிறப்பைக் குறித்துக் காட்டுகின்றது என்றும், அந்த ஏடு தெரிவிக்கின்றது.

மனிதரின் பயன்பாட்டுக்கு தண்ணீர்; அது, பல்வேறு மனிதச் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக, வேளாண்மை மற்றும், தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வளம்; ஆறுகள், பூமிக்கடியிலுள்ள நீர்வளம், ஏரிகள், குறிப்பாக, பெருங்கடல்கள் மற்றும், கடல்களாகத் தண்ணீர் ஆகிய, தண்ணீரோடு தொடர்புடைய மூன்று கூறுகள் பற்றி இந்த ஏடு விளக்குகிறது. 

வறியோரின் அழுகுரல் மற்றும், இப்பூமியின் அழுகுரலின் அடையாளமாக உள்ள தண்ணீர் பற்றிய இந்த ஏட்டின் ஒவ்வொரு பிரிவும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும், தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும், அதனைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவரிக்கிறது.  

இந்த ஏட்டின் இறுதிப் பிரிவு, கல்வி மற்றும், ஒருங்கிணைந்த முயற்சி பற்றியும் கூறுகிறது. 

செய்தியாளர் சந்திப்பு

மார்ச் 30, இத்திங்கள் மாலையில் இந்த ஏட்டை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வறிய மற்றும், வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள், சுத்தம் மற்றும், நலவாழ்வுக்கு மிக அடிப்படைத் தேவையான தண்ணீரைப் போதுமான அளவு பெற இயலாமல், நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டது.

இந்நெருக்கடியில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு பற்றியும் சுட்டிக்காட்டியுள்ள இந்த அவை, சுத்தமான தண்ணீர், வாய்கழுவப் பயன்படுத்தப்படும் சிறு தொட்டி, சவுக்காரங்கள், மற்றும், நலவாழ்வு வசதிகளின்றி, தரமான பராமரிப்பை மேற்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.

குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சை, கொள்ளை நோய் போன்ற எவையுமே, தண்ணீரின்றி பாதுகாப்பாக இடம் பெறாது என்றுரைத்துள்ள இத்திருப்பீட அவை, கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவியுள்ள இச்சூழலில், தண்ணீரின் தேவை அதிகம் உணரப்படுகின்றது என்றும் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2020, 14:46