தேடுதல்

மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் 

புனித பேதுரு பெருங்கோவில், வளாகம் மூடப்பட்டுள்ளன

இத்தாலிய ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், நோயுற்றோரைச் சந்தித்தல், ஒப்புரவு அருளடையாளம் வழங்குதல், ஆகிய பணிகளை அருள்பணியாளர்கள் தொடர்ந்து ஆற்றுவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

COVID-19 தொற்றுக்கிருமி நெருக்கடியின் காரணமாக, வத்திக்கானில், புனித பேதுரு பெருங்கோவில் மற்றும், அப்பெருங்கோவில் வளாகம் ஆகியவை, மக்கள் நடமாட்டத்திற்கு மூடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூடிவருவதைக் குறைக்கும் நோக்கத்தில் இத்தாலிய அரசு விதித்துள்ள ஆணையையடுத்து, இந்த ஏற்பாடு, ஏப்ரல் 3ம் தேதி முடிய பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி முடிய வழிபாடுகள் நிறுத்தம்

மேலும், ஏப்ரல் 3ம் தேதி முடிய, இத்தாலியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், மக்கள் தனிப்பட்ட முறையில் செபிப்பதற்காக ஆலயங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும், இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், நோயுற்றோரைச் சந்தித்தல், ஒப்புரவு அருளடையாளம் வழங்குதல், ஆகிய பணிகளை அருள்பணியாளர்கள் தொடர்ந்து ஆற்றுவர் என்றும் இத்தாலிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்த நோயைக்குறித்த அச்சத்தை வளர்ப்பதற்குப் பதில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் இணைந்து செபிப்பதற்கு இது தகுந்த தருணம் என்று இத்தாலிய ஆயர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம், கோடை இல்லம்

இதற்கிடையே, வத்திக்கான் அருங்காட்சியகம், மற்றும் வத்திக்கானுடன் தொடர்புடைய ஏனைய அருங்காட்சியகங்களும், பொதுத் திடல்களும் மூடப்பட்டுள்ளன என்றும், அதேவண்ணம், திருத்தந்தையரின் கோடை இல்லமான, காஸ்தேல் கந்தோல்ஃபோவும் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடி, மற்றும், மருந்தகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாலும், அவற்றில், ஒரே நேரத்தில் நுழைவதற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2020, 15:22