உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்தில், திருப்பீட உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானம் உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்தில், திருப்பீட உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானம் 

அரிச்சாவில் நடைபெறும் ஆண்டு தியானத்தின் இரு உரைகள்

கண்களால் காணமுடியாத இறைவனுக்கு செவிமடுப்பதற்கு முயற்சிகள் செய்யாமல், கண்ணால் காணக்கூடிய பல போலி தெய்வங்களைப் பின்பற்றத் துவங்குவதே, பல்வேறு பாவங்களுக்கு வழி வகுக்கிறது - அருள்பணி பொவாத்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், திருப்பீடத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளை, ஆண்டு ஆன்மீக பயிற்சிகளில் வழிநடத்திவரும் இயேசு சபை அருள்பணி பியெத்ரோ பொவாத்தி (Pietro Bovati) அவர்கள், தந்தையாம் இறைவனிலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலும் நம் நம்பிக்கை குறையும் வேளையில், அங்கு, போலி தெய்வங்களின் வழிபாடு துவங்கும் ஆபத்து உள்ளது என்று, இச்செவ்வாய் மாலையில் வழங்கிய தியான உரையில் கூறினார்.

பொற்கன்றை வணங்கிய நிகழ்வு

உரோம் நகருக்கருகே அரிச்சா (Ariccia) எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகளின் ஆண்டு தியானத்தை வழிநடத்தி வரும் அருள்பணி பொவாத்தி அவர்கள், பாலை நிலத்தில் பொற்கன்றை, இஸ்ரயேல் மக்கள் வணங்கிய நிகழ்வை (விடுதலைப் பயணம் 32) மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார்.

நம்பிக்கை குறைவின் அடையாளம், பாவம்

நாம் புரியும் பாவங்கள், இறைவனின் திருச்சட்டங்களுக்கு எதிராகச் செல்லும் போக்கை மட்டும் உணர்த்துவதில்லை, மாறாக, இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையில் குறைவுபட்டிருப்பதையும் உணர்த்துகிறது என்று, அருள்பணி பொவாத்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

கண்களால் காணமுடியாத இறைவனுக்கு செவிமடுப்பதற்கு முயற்சிகள் செய்யாமல், கண்ணால் காணக்கூடிய பல போலி தெய்வங்களைப் பின்பற்றத் துவங்குவதே, பல்வேறு பாவங்களுக்கு வழி வகுக்கிறது என்று, அருள்பணி பொவாத்தி அவர்கள் தன் தியான உரையில் சுட்டிக்காட்டினார்.

இறைவன் அழைப்பை ஏற்க மறுத்த பார்வோன்

மேலும், இச்செவ்வாய் காலையில், அருள்பணி பொவாத்தி அவர்கள் வழங்கிய தியான உரையில், இஸ்ரயேல் மக்களை விடுவிக்குமாறு, மோசே வழியே இறைவன் பார்வோனுக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்ததைப் பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன், மோசே வழியே தன்னுடன் பேசும் இறைவன் யார் என்று பார்வோன் எழுப்பிய கேள்வியில், இன்றைய உலகம் இறைவனை நோக்கி எழுப்பும் ஆணவக் கேள்விகளுக்கு ஒரு முன்னோடியைக் காணமுடிகிறது  என்பதையும், பாப்பிறை விவிலியக் கழகத்தின் செயலராகப் பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர் பொவாத்தி அவர்கள் தன் தியான உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2020, 15:10