நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

"அவசரகால நிலைகளும், பிறரன்பும்" - கர்தினால் தாக்லே

நம் நலனைப் பாதுக்காக்க கரங்களைக் கழுவுதல் அவசியம் என்றாலும், அது, பிலாத்து செய்ததுபோல் மாறிவிடக்கூடாது – கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமியின் உலகளாவிய பரவலை மையப்படுத்தி, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

"அவசரகால நிலைகளும், பிறரன்பும்" என்ற தலைப்பில், வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்டுள்ள இக்காணொளியில், இந்த நோய் பரவிவரும் சூழலில், நம் நடுவே, பிறரன்பும் உலக அளவில் பரவவேண்டும் என்று, கர்தினால் தாக்லே அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

அவசரகால நிலை, உலகளாவிய பரவல்

அவசரகால நிலையைக் குறிக்க பயன்படுத்தப்படும் emergency என்ற சொல்லையும், உலகளாவிய பரவல் என்பதைக் குறிக்கும் pandemia என்ற சொல்லையும் இக்காணொளியின் துவக்கத்தில் விளக்கிக்கூறும் கர்தினால் தாக்லே அவர்கள், நம்மிடையே, பிறரன்பும், ஓர் அவசரகால அடிப்படையில் உலகெங்கும் பரவவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் நலப்பணியாளர்கள்

நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளம், வறட்சி, மற்றும் நோய் என்ற பல்வேறு அவசரகால நிலைகளை மனிதகுலம் அடிக்கடி சந்தித்து வருகிறது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், இந்த நெருக்கடி வேளைகளில், ஒவ்வொருவரும், தங்களையும், தங்கள் குடும்பங்களையும் காப்பாற்றுவது அடிப்படை தேவை என்பதையும் எடுத்துரைத்தார்.

தற்போதைய நெருக்கடி, உலகளாவிய ஓர் ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், இந்த நெருக்கடியைத் தீர்க்க, தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்துவரும் நலப்பணியாளர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

பிலாத்து கரங்களைக் கழுவியதைப் போல்...

இந்த ஆபத்து நேரத்தில் நாம் மேற்கொள்ளும் ஓர் எச்சரிக்கையாக கரங்களைக் கழுவுதல் வலியுறுத்தப்படுகிறது என்பதை, இக்காணொளியில் எடுத்துரைக்கும் கர்தினால் தாக்லே அவர்கள், "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" (மத். 27:24) என்று, பிலாத்து, மக்கள் முன், தன் கரங்களைக் கழுவிய காட்சியை, ஒப்புமைப்படுத்திப் பேசியுள்ளார்.

நம் நலனைப் பாதுக்காக்க கரங்களைக் கழுவுதல் அவசியம் என்றாலும், அது, பிலாத்து செய்ததுபோல் மாறிவிடக்கூடாது; அடுத்தவர் மேல், நம் பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிக்கும் ஒரு செயலாக அமைந்துவிடக்கூடாது என்பதை, கர்தினால் தாக்லே அவர்கள், இக்காணொளியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உலகெங்கும் பரவவேண்டிய அக்கறை

இந்நோய் கிருமியின் உலகளாவிய பரவலை எதிர்த்து மனித குலம் போராடிவரும் வேளையில், முதியோர், வறியோர், வேலையை இழந்தோர், புலம் பெயர்ந்தோர், வீடற்றோர், நலப்பணிகளில் ஈடுபட்டிருப்போர் என அனைவர் மீதும் நாம் அக்கறை கொண்டு செயலாற்றவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் வழங்கியுள்ள இச்செய்தியை, பின்வரும் YouTube இணைப்பின் வழியே காண இயலும்: https://www.youtube.com/watch?v=tCW-2wTt_K0&feature=youtu.be

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2020, 14:55