கர்தினால் Beniamino Stella கர்தினால் Beniamino Stella  

புனித வார நிகழ்வுகள், மக்களின் பங்கேற்பின்றி, நேரடி ஒளிபரப்பில்

நேரடியான பங்கேற்பு இல்லாமல், ஊடக வழி பங்கேற்பிலும், தூய ஆவியார் நம்மை அடையக்கூடும் என்பதை நம்பவும், இக்கடினமானச் சூழல் வழியே கடவுள் நமக்குச் சொல்ல விழையும் செய்திகளை உள்ளத்தில் தியானிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித வார நிகழ்வுகள் மக்களின் பங்கேற்பின்றி, நேரடி ஒளிபரப்பில் நிகழ்வதை, புதிய வழிகளில் நம்பிக்கை கொள்வதற்கு, தூய ஆவியார் நம்மை அழைக்கும் தருணமாக கருதவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மார்ச் 15, கடந்த ஞாயிறன்று, பாப்பிறை இல்லத்தின் நிர்வாக அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து, இவ்வாண்டு, வத்திக்கானில், புனித வார நிகழ்வுகள் மக்களின் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், இவை, ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Beniamino Stella அவர்கள், மக்கள் பங்கேற்கும் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளச் சூழலில், நாம் சிறு, சிறு குடும்பங்களாக இறைவனை இன்னும் நெருங்கி வருவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும் என்று கூறினார்.

நேரடியான பங்கேற்பு இல்லாமல், ஊடக வழி பங்கேற்பிலும், தூய ஆவியார் நம்மை அடையக்கூடும் என்பதை நம்பவும், இக்கடினமானச் சூழல் வழியே கடவுள் நமக்குச் சொல்ல விழையும் செய்திகளை உள்ளத்தில் தியானிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

புனித வார நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வான, 'Urbi et orbi' செய்தியும், திருத்தந்தையின் சிறப்பு ஆசீரும், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் நிகழ்வது, நினைத்துப் பார்க்க கடினமாக உள்ளது என்பதை, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், நம் நம்பிக்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சவாலாக இச்சூழலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

செபம், தவம், நற்செயல்கள் என்ற உன்னத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தவக்காலத்தில் நிகழ்ந்துள்ள இந்த நெருக்கடி, தனிமையில் நம்மை சிந்திக்கவும், செபிக்கவும், ஊடகக் கருவிகளின் உதவியின்றி, மற்றவர்களைச் சந்திக்கவும் நமக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:41