வீடற்றோருக்கு உணவுப் பைகளை தயாரிக்கும் தர்மப்பணி அலுவலகப் பணியாளர்கள் வீடற்றோருக்கு உணவுப் பைகளை தயாரிக்கும் தர்மப்பணி அலுவலகப் பணியாளர்கள் 

கொரோனா நெருக்கடியிலிருந்து வீடற்றோரைக் காக்க...

உரோம் நகரிலும், வத்திக்கானைச் சுற்றிலும் வாழும் வறியோரை, கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியிலிருந்து காப்பதற்கு, திருப்பீடம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியால் இத்தாலி நாடு பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உரோம் நகரிலும், வத்திக்கானைச் சுற்றிலும் வாழும் வறியோரை, இந்நெருக்கடியிலிருந்து காப்பதற்கு, திருப்பீடம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று, திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி நேரத்திலும், வத்திக்கான் வளாகத்தில் உள்ள குளியல் அறைகள், வறியோருக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று கூறிய கர்தினால் Krajewski அவர்கள், குளியல் அறைகளைப் பயன்படுத்துவோர், இத்தாலிய அரசு விதித்துள்ள சுகாதார விதிமுறைகளுக்கு கீழ்படியவேண்டும் என்பதில் தர்மப்பணித் துறை தீவிர கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும், வீடற்ற வறியோருக்கு வழங்கப்பட்டு வந்த உணவைப் பெறுவதற்காக, அவர்கள் கூட்டமாக வருவதை தடுக்க, அவர்களுக்குத் தேவையான உணவு, பைகளில் வைக்கப்பட்டு, விரைவான முறையில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் கர்தினால் Krajewski அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

இந்த நெருக்கடி நேரத்தில், வீடற்றவர்களும், வறியோரும் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு வலியுறுத்திக் கூறவும், அதே வேளையில், இந்த நெருக்கடியையொட்டி விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும், திருத்தந்தையின் தர்மப்பணித் துறை முயன்று வருகிறது என்று, கர்தினால் Krajewski அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2020, 15:09