தேடுதல்

"ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற தலைப்பில், உரோம் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கருத்தரங்கு "ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற தலைப்பில், உரோம் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கருத்தரங்கு 

"ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" - வத்திக்கான் கருத்தரங்கு

பல்வேறு நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள், பொருளாதாரத்தில் நொபெல் விருதுபெற்றவர், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் உட்பட பல்வேறு பொருளாதார அறிஞர்கள் கலந்துகொண்ட வத்திக்கான் கருத்தரங்கு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயவியல் பாப்பிறைக் கழகம், "ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற தலைப்பில், சனவரி 5, இப்புதனன்று, உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், பிரான்ஸ், அர்ஜென்டீனா, மெக்சிகோ, பாரகுவே, எல் சால்வதோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிதித்துறை அமைச்சர்கள், பொருளாதாரத்தில் நொபெல் விருதுபெற்றவர், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் உட்பட பல்வேறு பொருளாதார அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில், இப்புதன் மாலை உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் நிலவும் பொருளாதார அமைப்பில் மறைந்திருக்கும் பல்வேறு ஆபத்துக்களை வெளிச்சமிட்டுக் காட்டியதோடு, அவற்றை சீர்செய்யும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

2001ம் ஆண்டு, பொருளாதாரத்தில் நொபெல் விருது பெற்ற Joseph Stiglitz என்ற அமெரிக்க பொருளாதார அறிஞர், "உலகளாவிய பொருளாதார மாற்றம்: மக்கள் சக்தி, நல்ல விழுமியங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றியபோது, முதலாளித்துவம் இவ்வுலகிற்கு செய்துள்ள தீமைகளைச் சுட்டிக்காட்டினார்.

இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றும் நிறுவனங்களுக்குப் பதிலாக, சமுதாய அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதன் வழியே, தற்போது நிலவும் பொருளாதார ஆபத்துக்களை தவிர்க்க இயலும் என்று Stiglitz அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

“America First”, அதாவது, "முதலில் அமெரிக்கா" என்று முழங்கிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களைப் போலவே, பல்வேறு உலகத் தலைவர்கள் தங்கள் நாடுகளை முன்னிறுத்த முயலும் இன்றையச் சூழலில், "முதலில் நமது பூமிக்கோளம்" என்ற கருத்தை வலியுறுத்தும் எண்ணங்களை நாம் வளர்க்க வேண்டும் என்று Stiglitz அவர்கள் அழைப்பு விடுத்தார்.

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் இலதாரியா, சமுதாயவியல் பாப்பிறைக் கழகத்தின் தலைவர், ஆயர் Sanchez Sorondo, பன்னாட்டு நிதி நிறுவனத்தின் உயர் அதிகாரி Kristalina Georgieva, உட்பட பலர், இக்கருத்தரங்கில், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 15:21