தேடுதல்

Vatican News
ஜெனீவா மனித உரிமைகள் கழகம் ஜெனீவா மனித உரிமைகள் கழகம் 

எரித்திரியா நாட்டைக் குறித்து திருப்பீடம் கவலை

எரித்திரியா நாட்டில், கத்தோலிக்க திருஅவைக்குச் சொந்தமான கல்வி நிலையங்கள், மற்றும் நலப்பணி மையங்கள் அனைத்தையும், அந்நாட்டு அரசு கைப்பற்றியிருப்பது குறித்து திருப்பீடம் கவலை கொண்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எரித்திரியா நாட்டில், கத்தோலிக்க திருஅவைக்குச் சொந்தமான கல்வி நிலையங்கள், மற்றும் நலப்பணி மையங்கள் அனைத்தையும், அந்நாட்டு அரசு கைப்பற்றியிருப்பது குறித்து திருப்பீடம் கவலை கொண்டுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், பிப்ரவரி 24ம் தேதி முதல், மார்ச் 20ம் தேதி முடிய ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கழகத்தின் 43வது அமர்வில், பிப்ரவரி 26 இப்புதனன்று இவ்வாறு கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளிலும், கத்தோலிக்கத் திருஅவை, மக்களின் கல்வி, மற்றும் நலவாழ்வில் அக்கறை கொண்டுள்ளது என்றும், குறிப்பாக, சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் மக்கள் நடுவே உழைத்து வருகிறது என்றும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

எரித்திரியா நாட்டில் வறுமையுற்ற மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க உழைத்து வரும் கத்தோலிக்க திருஅவையுடன், அந்நாட்டு அரசு, திறந்தமனதுடன் உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று, திருப்பீடம் வலியுறுத்திக் கூறுவதாக, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

'எல்லாருக்கும் எல்லாமுமாக செயல்பட' விழையும் கத்தோலிக்கத் திருஅவைக்குரிய நிறுவனங்களும், பணி அமைப்புக்களும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு, எரித்திரியா அரசு வழிவகுக்க வேண்டும் என்று, திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. அவையில் விண்ணப்பித்தார்.

27 February 2020, 15:28