உலக ஆயர்கள் மாமன்றம் உலக ஆயர்கள் மாமன்றம் 

2022ல், 16வது உலக ஆயர்கள் மாமன்றம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் 15வது ஆலோசனை கூட்டம், வத்திக்கானில், பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மக்கள், கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழல்களைக் களைவதற்கு, அந்தந்த அரசுகள் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது, உலக ஆயர்கள் மாமன்றச் செயலகம்.

மனித வர்த்தகத்திற்கெதிரான விழிப்புணர்வு அவசியம் என்றும், சொல்லமுடியாத துன்பங்களைக் கொணரும் போர்கள் முடிவுக்குவர தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றும், அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அச்செயலகம்.

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், வத்திக்கானில் பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற, 15வது ஆலோசனை கூட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள உலக ஆயர்கள் மாமன்றச் செயலகம், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு கருப்பொருள், இப்பூமியின் பல பகுதிகளில் இடம்பெறும் மக்களின் புலம்பெயர்வுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன என்று கூறியுள்ளது.

அடுத்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு உலகளாவிய திருஅவை நன்கு தயாரிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கும் நோக்கத்தில், அம்மாமன்றத்தை, 2022ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வைப்பதற்கு திருத்தந்தை தீர்மானித்தார் என்றும், அதன் தலைப்பு பின்னால் அறிவிக்கப்படும் என்றும், இச்செயலகம் தெரிவித்துள்ளது.

கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது, பாகிஸ்தானின் கராச்சி பேராயர் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், ஆலோசனை அவையின் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது போன்றவை இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியில், புலம்பெயர்ந்தோரின் நிலை குறித்து இச்செயலகம் வெளியிட்ட அறிக்கையில், இம்மக்களை வரவேற்று உதவிவரும் அரசுகள் மற்றும், அரசு-சாரா அமைப்புகளுக்கு, தன் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளது.  

போர்கள், பொருளாதார சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, தரிசுநிலங்கள் அதிகரிப்பு, சமய அடக்குமுறை, பயங்கரவாதம், சுற்றுச்சூழல் நெருக்கடி போன்ற பல கராணங்களால் மக்கள் கட்டாயமாகப் புலம்பெயர்கின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, திருஅவை, அம்மக்களுடன் தோழமையுணர்வு கொண்டுள்ளது என்றும் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2020, 14:01