திருப்பீட இலத்தீன் அமெரிக்க பணிக்குழுத் தலைவர், கர்தினால் Marc Ouellet திருப்பீட இலத்தீன் அமெரிக்க பணிக்குழுத் தலைவர், கர்தினால் Marc Ouellet 

மார்ச் 01, இஸ்பானிய- அமெரிக்க நாள்

அமெரிக்க கண்டத்தில், கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக நற்செய்திப்பணியாற்றி வரும் அனைவருக்கும், கர்தினால் Ouellet அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அவரில் வாழ்வுபெறும்படி” என்ற தலைப்பில், மார்ச் மாதம் முதல் நாளான இஞ்ஞாயிறன்று, இஸ்பெயின் மறைமாவட்டங்களில் சிறப்பிக்கப்படும், இஸ்பானிய- அமெரிக்க நாளுக்கு செய்தி ஒன்றை, திருப்பீட இலத்தீன் அமெரிக்க பணிக்குழுத் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள் அனுப்பியுள்ளார்.

இஸ்பானிய ஆயர் பேரவையால் சிறப்பிக்கப்படும் இந்நாளுக்கென செய்தி அனுப்பியுள்ள கர்தினால் Ouellet  அவர்கள், கிறிஸ்துவால் ஊட்டம் பெறப்பட்ட ஒரு வாழ்வை மையமாகக் கொண்ட மறைப்பணியை ஆற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க கண்டத்தில், கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, ஓர் ஆழமான நற்செய்திப்பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, தூய ஆவியாரின் உதவியுடன், தூதுரைப் பணியில் தொடர்ந்து தங்களை அர்ப்பணிக்குமாறும் கூறியுள்ளார், கர்தினால் Ouellet.

சமுதாயங்கள் மத்தியிலும், தனிமனிதர்க்கிடையிலும் இடம்பெறும் பலனுள்ள சந்திப்புகளை ஊக்குவித்துள்ள கர்தினால், ஒருங்கிணைந்த சூழலியலை வளர்ப்பதற்கு, தங்களை அர்ப்பணிக்குமாறும் கூறியுள்ளார்.

நற்செய்தி விழுமியங்களின்படி புதிய வாழ்வை அமைப்பதற்கு உதவும் மனித உடன்பிறந்தநிலை, ஒருமைப்பாடு, உரையாடல், போன்றவற்றை ஊக்குவித்து நற்செய்திப் பணியில் ஈடுபடுமாறும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், ஒருவர் எந்த மதத்தையும், கலாச்சாரத்தையும் சார்ந்தவராய் இருந்தாலும், மற்றவருக்குத் தொண்டாற்றுவதற்கும் தங்களை அர்ப்பணிக்குமாறும் கர்தினாலின் செய்தி கூறுகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2020, 15:07