தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி திருத்தந்தையுடன் திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி 

அணு பாதுகாப்பு பன்னாட்டு கருத்தரங்கில் திருப்பீடம்

உலகில், பாதுகாப்பு, அமைதி மற்றும், நிலையான தன்மையே, மனித இதயத்தின் மிக ஆழமான ஏக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. அணு ஆயுதங்களற்ற உலகைக் காண்பதே, இலட்சக்கணக்கான மனிதரின் ஆவலாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தேசிய, மண்டல மற்றும், உலக அளவில், அணு பாதுகாப்புக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறித்து விழிப்பாயிருந்து, அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, எல்லாரும் ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற திருப்பீடத்தின் ஆவலை, பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில், பிப்ரவரி 10, இத்திங்களன்று தெரிவித்தார், திருப்பீட அதிகாரி ஒருவர்.

ஆஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் பிப்ரவரி 10, இத்திங்களன்று தொடங்கியுள்ள, அணு பாதுகாப்பு பற்றிய ஐந்து நாள் பன்னாட்டு கருத்தரங்கில் (ICONS 2020) திருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச்செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி அவர்கள், திருப்பீடம், அணு பாதுகாப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்று கூறினார்.

IAEA எனப்படும், உலகளாவிய அணுப் பாதுகாப்பு அமைப்பின் யுக்திகளால், உலகில் அணு ஆயுதம், அணுக் கதிர்வீச்சு, அணு ஆயுத வர்த்தகம், அணுக் கழிவு ஆகியவை மேலும் பரவாமல் இருந்து வருகின்றது என்று பாராட்டிப் பேசிய தி ஜொவான்னி அவர்கள், அணு அல்லது அணுக் கதிர்வீச்சுப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, நாகசாகியில், அணு ஆயுதங்கள் பற்றி ஆற்றிய உரையில், பாதுகாப்பு, அமைதி மற்றும், நிலையான தன்மையே, மனித இதயத்தின் மிக ஆழமான ஏக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது அணு ஆயதங்களை மொத்தமாக அழிப்பது இதற்குரிய பதில் இல்லை, அணு ஆயுதங்களற்ற உலகைக் காண்பதே, இலட்சக்கணக்கான மனிதரின் ஆவலாக உள்ளது என்று கூறியதைச் சுட்டிக்காட்டினார், பிரான்செஸ்கா தி ஜொவான்னி.

நம் வருங்காலப் பாதுகாப்பு, மற்றவருக்கு அமைதியான பாதுகாப்பை உறுதி செய்வதைச் சார்ந்துள்ளது என்றும், அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை ஆகியவை, உலக அளவில் உருவாக்கப்படவில்லையெனில், அவற்றை அனைவராலும் அனுபவிக்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைக் குறிப்பிட்டு பேசினார் தி ஜொவான்னி.

அணு ஆயுதங்கள் தடை குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள திருப்பீடம், அதை நடைமுறைப்படுத்துவதிலும், அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்குவதிலும் ஆர்வமாய் இருப்பதை, அக்கருத்தரங்கில் தி ஜொவான்னி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வியன்னாவில் இடம்பெற்றுவரும் அணு பாதுகாப்பு குறித்த பன்னாட்டு கருத்தரங்கு, பிப்ரவரி 14, வருகிற வெள்ளியன்று நிறைவடையும். 

11 February 2020, 14:34