தேடுதல்

அமேசான் பகுதி பழங்குடி இனத்தவருடன் திருத்தந்தை அமேசான் பகுதி பழங்குடி இனத்தவருடன் திருத்தந்தை 

அமேசான் பகுதியின் அழகைக் கூறும் திருத்தூது மடல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள திருத்தூது அறிவுரை மடலை அவர் ஒரு காதல் கடிதம் போல வடித்துள்ளார் - திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – Andrea Tornielli

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் விளைவாக, "Querida Amazonia" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள திருத்தூது அறிவுரை மடலை அவர் ஒரு காதல் கடிதம் போல வடித்துள்ளார் என்று, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர் – முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி (Andrea Tornielli) அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த அறிவுரை மடலில், பல்வேறு கவிஞர்களின் உதவியுடன், திருத்தந்தை, அமேசான் பகுதியின் அழகையும், அப்பகுதியைக் குறித்து நாம் கொள்ளவேண்டிய மதிப்பையும் உணர்த்தியுள்ளார் என்று தொர்னியெல்லி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கியுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளார்.

திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த அறிவுரை மடல், அமேசான் பகுதியைக் குறித்து பேசினாலும், இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உலகம் அனைத்தையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்று தொர்னியெல்லி அவர்களின் தலையங்கம் மேலும் கூறுகிறது.

அமேசான் பகுதியில் பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தர்கள், தங்கள் கலாச்சாரத்தையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்வாதாரங்களையும் காப்பதற்கு அனைத்துலக சமுதாயம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடல் வழியே அழைப்பு விடுத்துள்ளார் என்று, தொர்னியெல்லி அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள "Querida Amazonia" திருத்தூது அறிவுரை மடல், கத்தோலிக்கத் திருஅவையில், பணித்துவ முறைகளிலும், அதிகார கட்டமைப்பிலும் மாற்றங்களை உருவாக்க துணிவு பெறவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது என்று, தொர்னியெல்லி அவர்களின் தலையங்கம் வலியுறுத்திக் கூறுகிறது.

அமேசான் பகுதியில் மத நம்பிக்கை வளர்வதற்கு பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அறிவுரை மடலில், சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளதை, தொர்னியெல்லி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2020, 15:15