தேடுதல்

புனித ஜோஸ்பின் பக்கித்தா புனித ஜோஸ்பின் பக்கித்தா 

மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபம், காரித்தாஸ்

ILO உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2016ம் ஆண்டில், ஏறத்தாழ 4 கோடியே, மூன்று இலட்சம் பேர், நவீன அடிமைமுறைகளுக்குப் பலியாகியிருந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறு வயதிலிருந்தே மனித வர்த்தகத்தின் கொடுமையை அனுபவித்த, புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழாவான, பிப்ரவரி 08, இச்சனிக்கிழமையன்று, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட செபிக்குமாறு, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தென் சூடான் நாட்டவரான, புனித பக்கித்தாவின் விழாவன்று, எல்லாவிதமான நவீன அடிமைமுறைகளுக்கு எதிராகவும், நவீன வாழ்வுமுறையின் வடுவான மனித வர்த்தகம் பற்றி மௌனம் காக்கப்படுவது உடைக்கப்பட வேண்டுமெனவும் இடம்பெறும் செப நடவடிக்கையில், உலகிலுள்ள அனைத்து கிளை காரித்தாஸ் அமைப்புகள் இணையுமாறு, உலகளாவிய காரித்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

மனித வர்த்தகம், உலகளாவிய ஒரு செயலாக உள்ளது, இது வாழ்வில் போராடும் மக்களையே மிகவும் பாதிக்கின்றது என்று கூறிய, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை மீட்பதற்கு காரித்தாஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது என்று கூறினார்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, சமுதாயத்தில் அறநெறி மதிப்பீடுகளை ஊக்குவிப்பதற்கு முயற்சிப்பதாகவும், ஒருவர் ஒருவர் மீதுள்ள கடமையுணர்வை வலியுறுத்துவதாகவும் கூறிய ஜான் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாதச் செபக்கருத்தையும் இதே நோக்கத்திற்காகவே அறிவித்துள்ளார் என்றும் கூறினார்.

இச்சனிக்கிழமையன்று, தலித்தா கும் என்ற உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட நடத்திய செப நடவடிக்கையில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பும் இணைந்தது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2020, 15:43