திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நீதி, நல்மனத்தின் ஆயுதங்கள் கையிலெடுக்கப்பட வேண்டும்

போரும், ஆயுதங்களும் உலகைத் தாக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொணராது. போர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈரானின் முக்கிய Quds படைப்பிரிவின் தளபதி Qasem Soleimani அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதையடுத்து உலக நாடுகள் அச்சமடைந்துள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அமைதி நிலவ இறைவனை மன்றாடி வருகிறார் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

இச்சூழலில், ஈரானின் தெக்ரான் நகரிலுள்ள திருப்பீட தூதர் பேராயர் லெயோ பொக்கார்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில், ஈரானில் நிலவும் பதட்டநிலைகள் மற்றும், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து திருத்தந்தைக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது, அவரும் மிகுந்த கவலையுடன் உள்ளார் என்று கூறினார்.

ஆயுதங்கள் கைவிடப்படுவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் மற்றும், நீதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதும், அதில் நம்பிக்கை வைப்பதும் எவ்வளவு கடினம் என்பதை, இந்நடவடிக்கை உருவாக்கியுள்ளது மற்றும், விளக்கியுள்ளது என திருத்தந்தை கூறியதாக, பேராயர் பொக்கார்தி அவர்கள் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும், அமைதியைக் கொணர்வதற்கு, உலக சமுதாயம் முழுவதும் தன்னை அர்ப்பணிப்பதற்கு உறுதியான அரசியல் அமைப்புகள் அவசியம் என்பதையும், திருத்தந்தை வலியுறுத்தினார் எனவும், பேராயர் பொக்கார்தி அவர்கள் கூறினார்.

ஈரானில் தற்போது மிகப்பெரிய அளவில் பதட்டநிலை நிலவுகிறது, வன்முறை, வேதனை மற்றும் எதிர்ப்புகளைத் தூண்டும் பேரணிகளால் அவநம்பிக்கை பிறந்துள்ளது என்றுரைத்த பேராயர், அனைத்து தரப்புகளும், கடந்தகாலப் பாடங்கள் கற்றுக்கொடுத்தவற்றை அறிந்து,  உரையாடலில் நம்பிக்கை வைத்து, அதில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

போரும், ஆயுதங்களும் உலகைத் தாக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொணராது என்றும், போர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், நீதி மற்றும், நல்மனத்தின் ஆயுதங்கள் கையிலெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈரான் திருப்பீட தூதர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தரப்பினரும், உலகளாவிய சட்ட விதிமுறைகளை மதிக்க வேண்டும், மத்திய கிழக்கின் சூழல், உலக சமுதாயத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், பேராயர் பொக்கார்தி அவர்கள் கூறினார்.

கொல்லப்பட்ட சுலைமானி அவர்கள், லெபனான் அல்லது சிரியாவில் இருந்து விமானம் மூலம் பாக்தாத் வந்ததாக கூறப்படுகிறது. அவரை ஈராக் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2020, 14:40