கர்தினால் டர்க்சன் கர்தினால் டர்க்சன்  

சோதனைகள் மத்தியில் நம்பிக்கை அவசியம்

ஈரானின் முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ளதை முன்னிட்டு, மத்திய கிழக்கிலுள்ள கிறிஸ்தவர்கள், சித்ரவதைகள் மற்றும், பிற துன்பங்களை புதிதாக எதிர்கொள்ளக்கூடும் என்று, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈரான் மற்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டநிலைகள் குறித்து கருத்து தெரிவித்த, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், சோதனைகள் மத்தியில், நம்பிக்கை அவசியம் என்று கூறியுள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில், சனவரி 3, இவ்வெள்ளியன்று அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி, மற்றும், அவரின் ஆலோசகரான தளபதி Abu Mahdi al-Muhandis ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதை முன்னிட்டு, ஈரானில் பெரிய அளவில் உருவாகியுள்ள பதட்டநிலைகள் குறித்து வத்திக்கான் வானொலியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், கர்தினால் டர்க்சன்.

அமைதி மற்றும், நல்லிணக்கத்திற்காக, மிகுந்த நம்பிக்கை மற்றும், ஆர்வமுடன் புதிய ஆண்டை தொடங்கிய வெகுசில நாள்களிலேயே, உலகின் பிற பகுதிகளில் வன்முறை மற்றும், போர் பற்றிய செய்திகளைப் பெறுவது, இதயத்தைப் பிழிகின்றது மற்றும், மிகவும் கவலை தருகின்றது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

நம் மீட்பரும், நம் தலைவருமாகிய இயேசு, இத்தகைய சூழலிலேயே பிறந்தார் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், அமைதியின் இளவரசைப் பற்றிக்கொள்ளும்போது இத்தகைய தடைகளை நம்மால் மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

அமைதிக்கு, அதிகப் பொறுமை அவசியம் எனவும், அதற்கு நிறையத் துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துச் சொன்னார்.

இதற்கிடையே, குற்றவாளிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று, ஈரான் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2020, 14:56