தேடுதல்

Vatican News
ஈரானில் போர் வேண்டாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென் கொரிய மக்கள் ஈரானில் போர் வேண்டாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தென் கொரிய மக்கள்  (ANSA)

மனித குலத்திற்கு உருவாகிவரும் கூடுதல் கவலைகள்

ஐ.நா.அவை உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே, உருவாக்கப்படும் அமைதி முயற்சி, ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவேண்டும் - அருள்பணி Fredrik Hansen

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து தொடர்ந்து வெளிவரும் வேதனைதரும் செய்திகளைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், பன்னாட்டு தூதர்களிடம், தன் கவலையை வெளியிட்டுள்ளார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையின் கூட்டமொன்றில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பாதுகாப்பு குழு, மத்தியக் கிழக்குப் பகுதியை மையப்படுத்தி, சனவரி 21, 22 ஆகிய இருநாள்கள், நடத்திய கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற அருள்பணி Fredrik Hansen அவர்கள் இவ்வாறு கூறினார்.

அண்மைய நாள்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே நிகழ்ந்து வரும் உரசல்கள், ஈராக், மற்றும் லெபனான் நாடுகளில் நிகழ்ந்துவரும் மக்கள் போராட்டங்கள் ஆகியவை, மனித குலத்திற்கு கூடுதல் கவலைகளை உருவாக்கி வருகின்றன என்று, அருள்பணி Hansen அவர்கள் எடுத்துரைத்தார்.

நாம் அனைவரும், மௌனம் காப்பதும், அக்கறையற்றிருப்பதும், மத்தியக் கிழக்குப் பகுதியில், கூடுதலானத் துன்பங்களை விளைவிக்கின்றன என்பதற்கு, ஏமன் நாடு சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை கூறியுள்ளதை, அருள்பணி Hansen அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

புனித பூமியில் உள்ள எருசலேம் நகரம், அமைதியின் நகரமாக விளங்குவதற்கும், அப்பகுதிகளில் வாழும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும், சந்திப்பையும், உரையாடலையும் மேற்கொள்வதற்கும், பன்னாட்டு அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, அருள்பணி Hansen அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே, அமைதி முயற்சிகள், தீவிரமாக மேற்கொள்ளப்படுவதற்கு, அனைத்துலக நாடுகளும் ஆதரவு தரவேண்டும் என்றும், ஐ.நா.அவை உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், இந்த அமைதி முயற்சி, ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவேண்டும் என்றும், அருள்பணி Hansen அவர்கள், தன் உரையின் இறுதியில் கூறினார்.

23 January 2020, 14:55