முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் பேராயர் Gänswein - கோப்புப் படம்  முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் பேராயர் Gänswein - கோப்புப் படம்  

"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து" நூல் பற்றி...

"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து" என்ற புதிய நூலிலிருந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரை நீக்கிவிடுமாறு பேராயர் Gänswein அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சனவரி 15, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டில் வெளியாகவுள்ள "எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து" என்ற புதிய நூலிலிருந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரை நீக்கிவிடுமாறு, பாப்பிறை இல்ல நிர்வாகியும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயலருமாகிய, பேராயர் Georg Gänswein அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து" என்ற சர்ச்சைக்குரிய புதிய நூல் பற்றி, சனவரி 14, இச்செவ்வாயன்று ANSA செய்தியிடம் பேசிய பேராயர் Gänswein அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அந்நூலின் இணை ஆசிரியர் என்ற பெயரை நீக்கிவிடுமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள், அந்நூல் வெளியீட்டாளர்களைத் தொடர்புகொண்டு, அந்நூலின் முகவுரை மற்றும், இறுதியில் இடம்பெற்றுள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கையெழுத்தையும், அந்நூலின் இணை ஆசிரியர் என்ற பெயரையும் நீக்கிவிடுமாறு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அறிவுரையின்படி கேட்டுக்கொண்டுள்ளதாக, பேராயர் Gänswein அவர்கள் கூறினார். 

92 வயது நிரம்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் ஏறத்தாழ 600 வருட வரலாற்றில் பாப்பிறைப் பணியிலிருந்து விலகிய முதல் திருத்தந்தையாவார். 2013ம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தனது கீழ்ப்படிதலும், பிரமாணிக்கமும் மாறாதது என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2020, 15:48