தாய்லாந்தில் கர்தினால் பிலோனி தாய்லாந்தில் கர்தினால் பிலோனி  

கர்தினால் பிலோனி அவர்களின் பிரியாவிடை பேட்டி

திருமணமான தம்பதியர், மற்றும், குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள பலரும் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஆர்வம் காட்டுவது, திருஅவைக்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் - கர்தினால் ஃபிலோனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவை அறியாத நாடுகள் என்றழைக்கப்பட்ட மறைபரப்புப்பணி நாடுகளில் மட்டுமல்லாமல், கிறிஸ்துவ மறையில் பாரம்பரியமாக வளர்ந்து வந்துள்ள நாடுகளிலும் நற்செய்தியை அறிவிக்கும் கடமை கூடியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2011ம் ஆண்டு முதல், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகப் பணியாற்றி, சனவரி 15ம் தேதி, பணிமாற்றம் பெறும் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறினார்.

மக்களுக்கு மறைபரப்புப்பணி ஆற்றுதல் என்ற கருத்துடன் செயலாற்றிய கத்தோலிக்கத் திருஅவை, தற்போது, மக்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு மறைப்பரப்புப்பணி ஆற்றவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது என்று தன் பேட்டியில் எடுத்துரைத்த கர்தினால் ஃபிலோனி அவர்கள், இந்தக் கண்ணோட்டத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறைபரப்புப்பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

திருமணமான தம்பதியர், மற்றும், குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள பலரும் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஆர்வம் காட்டுவது, திருஅவைக்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று, கர்தினால் ஃபிலோனி அவர்கள் மகிழ்வைத் தெரிவித்தார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா, அமேரிக்கா ஆகிய கண்டங்களில் தான் மேற்கொண்ட 50க்கும் மேற்பட்ட மேய்ப்புப்பணி பயணங்களையும், இப்பயணங்களில் தான் சந்தித்த இளம் தலத்திருஅவைகளையும் குறித்து, கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

பணிமாற்றம் பெற்று செல்லும் கர்தினால் பிலோனி அவர்களுக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் இணைச்செயலர், பேராயர் Giampietro Dal Toso அவர்கள், கர்தினால் ஃபிலோனி அவர்கள், ஓய்வின்றி உழைத்ததை பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

இப்பேராயத்தின் தலைவராகச் செயலாற்றுவது எளிதல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Dal Toso அவர்கள், குறிப்பாக, உலகின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கு ஆயர்களைத் தெரிவு செய்யும் பணி மிகவும் கடினமானது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டு, அப்பணியில், கர்தினால் ஃபிலோனி அவர்கள் காட்டிய பொறுமை, மற்றும், உறுதிப்பாடு, பாராட்டுக்குரியன என்று கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக, கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றிவந்த கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்களை, புனித பூமியில் உள்ள புனித கல்லறைகளின் பாதுகாப்பாளர்கள் அமைப்பின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் புதியத் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை திருநாளன்று நியமித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 15:13