தேடுதல்

Vatican News
"ஆண்டுகளின் செல்வம்" என்ற தலைப்பில் நடைபெறும் வத்திக்கான் கருத்தரங்கு "ஆண்டுகளின் செல்வம்" என்ற தலைப்பில் நடைபெறும் வத்திக்கான் கருத்தரங்கு 

"ஆண்டுகளின் செல்வம்" - வயது முதிர்ந்தோரைக் குறித்து கருத்தரங்கு

வயது முதிர்ந்தோரை மையப்படுத்தி, உரோம் நகரில், "ஆண்டுகளின் செல்வம்" என்ற தலைப்பில், நடைபெறும் கருத்தரங்கில், 60 நாடுகளைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி வழங்கும் எண்ணத்துடன், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, சனவரி 29, இப்புதன் முதல், 31, வெள்ளி முடிய, வத்திக்கானில், முதல் முறையாக, ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

உரோம் நகரில் உள்ள 'அகஸ்தீனியானும்' மையத்தில், "ஆண்டுகளின் செல்வம்" என்ற தலைப்பில், நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், 60 நாடுகளைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

வயதில் முதிர்ந்தோர் ஒப்பற்ற கருவூலங்கள் என்றும், அவர்களும், இளையோரும் உரையாடல்களை மேற்கொள்வது இவ்வுலகிற்கு மிகவும் தேவை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை கூறிவரும் கருத்து, இக்கருத்தரங்கின் விதையாக அமைந்தது என்று இத்திருப்பீட அவை கூறியுள்ளது.

இக்கருத்தரங்கின் முதல் பகுதியில், தூக்கியெறியும் கலாச்சாரமும், அதன் மாற்று அடையாளமாக திருஅவை வயதில் முதிர்ந்தோரை பேணும் பண்பும் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்கின் இரண்டாவது பகுதியில், வயதில் முதிர்ந்த தாத்தா, பாட்டி என்ற தலைமுறையினருக்கு குடும்பங்கள் காட்டவேண்டிய பொறுப்பு குறித்தும், மூன்றாவது  பகுதியில், வயதில் முதிர்ந்தோர், திருஅவைக்குப் பணியாற்ற பெற்றுள்ள அழைப்பு குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனவரி 31ம் தேதி, வெள்ளியன்று, இக்கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் அனைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்திப்பதுடன், இக்கருத்தரங்கு நிறைவுக்கு வரும்.

29 January 2020, 15:23