தேடுதல்

Vatican News
அருள்பணித்துவ அருள்பொழிவு திருப்பலி அருள்பணித்துவ அருள்பொழிவு திருப்பலி  (ANSA)

மணமாகா நிலை - திருத்தந்தைக்குப் பணிந்திருக்கும் இரு ஆயர்கள்

அருள்பணித்துவ மணமாகா நிலை, திருஅவையால் வெளியிடப்பட்ட மாறாக் கோட்பாடு அல்ல எனினும், இந்நிலை, இறைவனால் ஒரு சில மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள அருள்வரம் - முன்னாள் திருத்தந்தை, கர்தினால் சாரா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் அருள்பணியாளராகப் பணியாற்ற அடிப்படைத் தேவையென திருஅவையால் கருதப்படும் மணமாகா நிலை குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருவழிபாட்டுப் பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா (Robert Sarah) அவர்களும் இணைந்து, தங்கள் கருத்துக்களை, ஒரு நூலில் வெளியிட்டுள்ளனர்.

"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து"

"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து" (From the Depths of Our Hearts) என்ற தலைப்பில், சனவரி 15ம் தேதி, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் இந்நூல், ஆங்கில மொழியில், பிப்ரவரி 20ம் தேதி, வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்பணித்துவ நிலைக்கு அடிப்படைத் தேவையான மணமாகா நிலையைக் குறித்தும், திருமணமான ஆண்களை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்வது குறித்தும், ஆசிரியர்கள், இந்நூலில், தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

திருத்தந்தைக்குப் பணிந்திருக்கும் இரு ஆயர்கள்

பிள்ளைகளுக்குரிய கீழ்ப்படிதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பணிந்திருக்கும் இரு ஆயர்கள் என்று, தங்களையே அடையாளப்படுத்தும் முன்னாள் திருத்தந்தை அவர்களும், கர்தினால் சாரா அவர்களும், உண்மையைத் தேடுவதிலும், திருஅவையின் ஒருமைப்பாட்டைக் காக்கும் அன்பிலும் தாங்கள் நிலைத்திருப்பதாக, இந்நூலின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அருள்பணித்துவ நிலைக்கும், மணமாகா நிலைக்கும் இடையே உள்ள அடிப்படையானத் தொடர்புக்கு எவ்வகையிலும் ஆபத்து விளைவிக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கவேண்டாம் என்ற விண்ணப்பம், இந்நூலின் வழியே விடப்பட்டுள்ளது.

திருஅவையின் மாறாக் கோட்பாடு அல்ல

அருள்பணித்துவ மணமாகா நிலை, திருஅவையால் வெளியிடப்பட்ட மாறாக் கோட்பாடு அல்ல எனினும், இந்நிலை, இறைவனால் ஒரு சில மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள அருள்வரம் என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம், திருத்தந்தை புனித 6ம் பவுல் ஆகியோரின் கூற்றுகளுடன் இந்நூல் சுட்டிக்காட்டியுள்ளது.

குடும்பத் தலைவர்களின் அருள்பொழிவு

2019ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், வத்திக்கானில், அமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நடைபெற்ற வேளையில், அமேசானின் ஒரு சில பகுதிகளில், மக்களுக்கு பல மாதங்களாக திருப்பலி நிகழாமல் இருக்கும் சூழல் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் அருள்பணியாற்ற, குடும்பத் தலைவர்கள் சிலருக்கு அருள்பொழிவு தரப்படுவது குறித்த விவாதங்கள் எழுந்தன.

இந்த மாமன்றத்தின் இறுதி உரையை, வழங்கியவேளையில், குடும்பத் தலைவர்களின் அருள்பணித்துவ அருள்பொழிவு குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை எனினும், இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதை, ஊடகங்கள் மீண்டும், மீண்டும் பேசி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

13 January 2020, 15:15