தேடுதல்

Vatican News
பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell 

வயது முதிர்ந்தோர்க்கு மேய்ப்புப்பணி பன்னாட்டு கருத்தரங்கு

உரோம் நகரில், சனவரி 29-31 வரை நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில், உலகில் வயதானவர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும், ஆயர் பேரவைகள், துறவு சபைகள், மற்றும் பொதுநிலை இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வயது முதிர்ந்தோர்க்கு மேய்ப்புப்பணி என்ற தலைப்பில், சனவரி 29, வருகிற புதனன்று, மூன்று நாள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, உரோம் நகரில் நடத்தவுள்ளது.

வயது முதிர்ந்தோர், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக மாறி வருகின்றனர் மற்றும், அவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்து வருவதையடுத்து, இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கு குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்கள், இப்போதைய உலகில் நிலவும் புறக்கணிப்பு கலாச்சாரம், மக்களை ஒதுக்கி வைக்கின்றது என்று கூறினார்.

திருஅவையிலும்கூட, சிலவேளைகளில் வயதானவர்கள் மறக்கப்படுகின்றனர் என்றும், வயதானவர்கள், மிகவும் தனிமையில் வாழ்கின்றனர் என்பதை, பங்குத்தளங்களில், குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் பங்குத்தளங்களில் பணியாற்றுகின்றவர்கள் அறிந்திருக்கின்றனர் என்றும், கர்தினால் Farrell அவர்கள் எடுத்துரைத்தார்.

வயதானவர்கள், பல ஆண்டுகால வாழ்வின் மாபெரும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர் என்பதால், அவர்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக மாறி வருகின்றனர் என்று கூறிய கர்தினால் Farrell அவர்கள், திருஅவை, அம்மக்கள் மீது மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்று கூறினார்.

சனவரி 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை உரோம் நகரில் நடைபெறும், பன்னாட்டு கருத்தரங்கில், உலகில் வயதானவர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும், ஆயர் பேரவைகள், துறவு சபைகள், கழகங்கள் மற்றும் பொதுநிலை இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். 

24 January 2020, 15:50