ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் பீட்டர் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் பீட்டர் டர்க்சன்  

உலகப் பொருளாதார மாநாட்டில், கர்தினால் டர்க்சன்

நாம் வாழ்வதற்கு இரண்டாவது பூமிக்கோளம் இல்லை என்பதையும், நாம் வாழும் பூமிக்கோளம் எழுப்பும் அழுகுரலை நிறுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் வலியுறுத்திய கர்தினால் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், சனவரி 21, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் (WEF) 50வது மாநாட்டில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஏனைய சமயத் தலைவர்களுடன், இணைந்து, சனவரி 22, இப்புதனன்று, செய்தியாளர்கள் கூட்டமொன்றில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடனும், மாஸ்கோ யூத மத தலைவர் கோல்ட்ஷ்மிட் (Goldschmidt) அவர்களுடனும் இணைந்து, கர்தினால் டர்க்சன் அவர்கள் மேற்கொண்ட இச்சந்திப்பில், 'இவ்வுலகமும், அதில் வாழும் வறியோரும் குரல் எழுப்பி அழுகின்றனர்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தை, செய்தியாளர்களுக்கு நினைவுறுத்தினார்.

"நாம் வாழ்வதற்கு இரண்டாவது பூமிக்கோளம் இல்லை" என்பதை இக்கூட்டத்தில் வலியுறுத்திக் கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நாம் வாழும் பூமிக்கோளம் எழுப்பும் அழுகுரலை நிறுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என்று எடுத்துரைத்தார்.

மனித வாழ்வில் சமயங்களுக்கு ஒரு குறுகிய இடத்தை அளித்து, அவை, மனிதர்களின் வாழ்வை மாற்றும் வழிகளை எடுத்துரைக்க வழியில்லாமல் செய்வது தவறு என்றும், மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் சமயங்கள் தங்கள் கருத்தை வெளியிடவேண்டும் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2020, 14:37