ஐ.நா. அவை கூட்டமொன்றில், கர்தினால் Ángel Ayuso Guixot ஐ.நா. அவை கூட்டமொன்றில், கர்தினால் Ángel Ayuso Guixot 

ஜெனீவா பல்சமய வழிபாட்டுக் கூட்டத்தில் கர்தினால் Guixot

அமைதியைக் குறித்து நம்பிக்கை இழக்கச் செய்யும் இன்றையச் சூழலில், ஒவ்வொரு மதமும் சொல்லித்தரும் தியானம் மற்றும் செபத்தின் வழியே, அமைதியை இவ்வுலகில் நிலைநாட்ட முடியும் - கர்தினால் Guixot

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதி என்ற கொடை, ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் வழங்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டின் உலக அமைதி நாள் செய்தியில் கூறியிருப்பது, அமைதியை மீண்டும் அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவியாக உள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில் பங்கேற்கும் திருப்பீட பிரதிநிதிகள் குழு, சனவரி 28, இச்செவ்வாயன்று, அந்நகரில் ஏற்பாடு செய்திருந்த பல்சமய வழிபாட்டுக் கூட்டமொன்றில், பல்சமய திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Ángel Ayuso Guixot அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

இவ்வுலகம் சக்தி வாய்ந்ததாகத் தோன்றினாலும், அமைதியைப் பொருத்தவரை நலிவுற்று காணப்படுகிறது என்றும், இதன் விளைவாக, அமைதி இவ்வுலகில் நிலவாது என்ற விரக்தி நம்மில் பலருக்கு உருவாகிறது என்றும், கர்தினால் Guixot அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

அமைதியைக் குறித்து நம்பிக்கை இழக்கச் செய்யும் இன்றையச் சூழலில், ஒவ்வொரு மதமும் சொல்லித்தரும் தியானம் மற்றும் செபத்தின் வழியே, அமைதியை இவ்வுலகில் நிலைநாட்ட முடியும் என்பதை உணர்த்த, நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று, கர்தினால் Guixot அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

சனவரி 28, இச்செவ்வாய் மாலையில், ஜெனீவா நகரில் உள்ள புனித நிக்கோலஸ் ஆலயத்தில் நடைபெற்ற இந்த பல்சமய வழிபாட்டுக் கூட்டத்தை, ஜெனீவா கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள் வழிநடத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2020, 15:13