தேடுதல்

Vatican News
பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா 

கருணைக் கொலைக்கு ஒருபோதும் ஆதரவு தரக்கூடாது

வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள நோயாளிகளுக்கு காட்டப்படும் அக்கறை எல்லா நாடுகளிலும் ஊக்கவிக்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கருணைக் கொலைக்கும், மருத்துவரின் உதவியுடன் ஆற்றப்படும் தற்கொலைக்கும் நாம் ஒருபோதும் உடன்படக் கூடாது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வருகிற பிப்ரவரி மாதம் 11ம் தேதி லூர்து அன்னை திருநாளன்று சிறப்பிக்கப்படும் 28வது நோயாளிகள் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தி பற்றி வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த, பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், நோயாளிகளை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மனித வாழ்வு, கருவறை தொடங்கி கல்லறை வரை காக்கப்பட வேண்டும் என்ற திருஅவையின் கோட்பாட்டை திருத்தந்தை தன் செய்தியில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்றுரைத்த பேராயர் பாலியா அவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஒவ்வொரு மனிதரின் மாண்பு மற்றும், வாழ்வை மதித்து பேணுவதில், எப்போதும் அக்கறை காட்டுவார்களாக என்று கூறியுள்ளார்.

மனித வாழ்வை, தொடக்க முதல், இறுதி வரை பாதுகாப்பதற்கு, பல்வேறு மதங்களிலும், உலக அமைப்புகளிலும்கூட முயற்சிகள் அதிகரித்து வருகின்றன என்றுரைத்த பேராயர், உலக மருத்துவ கழகம் போன்ற உலக அமைப்புகள், கருணைக் கொலை மற்றும், மருத்துவரின் உதவியுடன் ஆற்றப்படும் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுப்பதைச் சுட்டிக்காட்டினார்.

வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள நோயாளிகளுக்கு காட்டப்படும் அக்கறை எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும், இவ்வாறு ஆற்றப்படவில்லையெனில், நோயாளி, தன் வாழ்வை, தானே முடித்துக்கொள்ளும் நிலைக்கு உட்படுவார் என்றும், பேராயர் பாலியா அவர்கள் எச்சரித்தார்.

07 January 2020, 15:10