தேடுதல்

Vatican News
“உண்மையில் பிறரன்பு (Caritas in veritate)” என்ற திருமடலைக் குறித்த கருத்தரங்கின் அறிவிப்பு “உண்மையில் பிறரன்பு (Caritas in veritate)” என்ற திருமடலைக் குறித்த கருத்தரங்கின் அறிவிப்பு 

“உண்மையில் பிறரன்பு” திருமடலின் நல்தாக்கங்கள்

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ‘மக்களின் முன்னேற்றம்’ என்ற திருமடலை வெளியிட்டதன் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப்பின், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி, உண்மையில் பிறரன்பு என்ற திருமடலை வெளியிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் “உண்மையில் பிறரன்பு (Caritas in veritate)” என்ற திருமடல், சூழலியல் மற்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து கலந்தாராய்வதற்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, டிசம்பர் 3, இச்செவ்வாயன்று பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை வத்திக்கானில் நடத்தியது.  

பிறரன்பிலும், உண்மையிலும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் பற்றி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பத்து ஆண்டுகளுக்குமுன் வெளியிட்ட அவரது மூன்றாவது மற்றும், இறுதி திருமடல் பற்றிய கருத்தரங்கை தலைமையேற்று நடத்தினார், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

உண்மையில் பிறரன்பு திருமடல் ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்கள் பற்றிய சிந்தனைகளை, வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், உண்மையான மனித மற்றும், ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைத் தேடும் அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளில், அடிப்படை கிறிஸ்தவக் கோட்பாடுகள் வழிகாட்டுபவைகளாக இருக்க வேண்டும் என இத்திருமடல் கூறுகிறது என்றார்.

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ‘மக்களின் முன்னேற்றம் (Populorum progressio)’ என்ற திருமடலை வெளியிட்டதன் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப்பின், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி, உண்மையில் பிறரன்பு என்ற திருமடலை வெளியிட்டார். இதில் மனிதச் சூழலியல் பற்றி மட்டுமின்றி, உண்மையான மனித முன்னேற்றம், ஒவ்வொரு சூழலிலும் முழுமனிதரைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

03 December 2019, 15:23