2019ம் ஆண்டு மே மாதம், இலங்கை பயணத்தின்போது, குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஆலயத்தில் செபித்த கர்தினால் ஃபிலோனி 2019ம் ஆண்டு மே மாதம், இலங்கை பயணத்தின்போது, குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஆலயத்தில் செபித்த கர்தினால் ஃபிலோனி 

தலத்திருஅவைகளின் அழகிய முகத்தைக் காண முடிந்தது

அருள்பணியாளர்கள், மற்றும் துறவியரை, நற்செய்திப் பணிகளில் உருவாக்கத் தேவையான நிதி உதவிகளையும், செப உதவிகளையும் வழங்கிவரும் பொதுநிலையினர் அனைவருக்கும் நன்றி - கர்தினால் ஃபிலோனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2011ம் ஆண்டு முதல், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிவந்த கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், தன் பணிக்காலத்தில், தலத்திருஅவைகளின் அழகிய முகத்தைக் காண முடிந்தது என்று பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இப்பேராயத்தின் தலைவராக, ஆசியா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளில் தான் மேற்கொண்ட 50க்கும் மேற்பட்ட மேய்ப்புப்பணி பயணங்களைக் குறித்துப் பேசிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், நற்செய்தியை தங்கள் சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ முற்படும் அனைத்து தலத்திருஅவைகளையும் பாராட்டினார்.

அருள்பாணியாளர்கள் மற்றும் துறவியரின் உயர்நிலைப் படிப்பிற்கென்று, உரோம் நகரில் செயலாற்றும் பல்வேறு கல்லூரிகள், பயிற்சி இல்லங்கள் அனைத்தும் திறம்படச் செயலாற்றுகின்றன என்பதை, தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் ஃபிலோனி அவர்கள், இந்நிறுவனங்களில், அர்ப்பண உணர்வுடன் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.

அருள்பணியாளர்கள், மற்றும் துறவியரை, நற்செய்திப் பணிகளில் உருவாக்கத் தேவையான நிதி உதவிகளையும், செப உதவிகளையும் வழங்கிவரும் பொதுநிலையினர் அனைவரையும் தான் நன்றியோடு எண்ணிப் பார்ப்பதாகவும், அவர்களுக்காக தான் தொடர்ந்து செபிப்பதாகவும் கர்தினால் ஃபிலோனி அவர்கள் எடுத்துரைத்தார்.

2020ம் ஆண்டு, சனவரி மாதத்தின் நடுவில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் பணியை நிறைவு செய்யும் கர்தினால் ஃபிலோனி அவர்கள், புனித பூமியில் உள்ள புனித கல்லறைகளின் பாதுகாப்பாளர்கள் அமைப்பின் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2019, 15:59