தேடுதல்

2018ம் ஆண்டு வறியோர் தினத்தில் வறியோருடன் உணவருந்திய திருத்தந்தை 2018ம் ஆண்டு வறியோர் தினத்தில் வறியோருடன் உணவருந்திய திருத்தந்தை 

மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டிய நிகழ்வுகள்

வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, நவம்பர் 10ம் தேதி முதல், வறியோரை மையப்படுத்தி, வத்திக்கானில், பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 17 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கும் மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, நவம்பர் 10ம் தேதி முதல், வறியோரை மையப்படுத்தி, வத்திக்கானில், பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

மூன்றாவது வறியோர் உலக நாளின் துவக்க நிகழ்வாக, நவம்பர் 9, கடந்த சனிக்கிழமை மாலையில், புனித 6ம் பவுல் அரங்கத்தில், "வறியோருடன், வறியோருக்காக' என்ற தலைப்பில் நிகழ்ந்த ஓர் இசை நிகழ்வில், 7000த்திற்கும் மேற்பட்ட வறியோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நவம்பர் 10, கடந்த ஞாயிறு முதல், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில், ஒவ்வொரு நாளும், காலை 8 மணி முதல் இரவு பத்து மணி வரை வறியோருக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.          

மேலும், நவம்பர் 17ம் தேதி, பொதுக்காலத்தின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், காலை 10 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்றும், இத்திருப்பலிக்குப் பின்னர், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், 1,500க்கும் அதிகமான வறியோருடன் திருத்தந்தை, மதிய உணவு அருந்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், மூன்றாவது வறியோர் உலக நாளுக்கென, "எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" (திருப்பாடல் 9:18) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தத் திருப்பாடலின் சொற்கள், இன்று மிகவும் பொருத்தமான செய்தியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் முழுவதும் புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமை, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ளது என்றும், இந்த முயற்சியில், உரோம் நகரைச் சேர்ந்த பல்வேறு மருத்துவமனைகள் பங்கேற்றுவருகின்றன என்றும் Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2019, 15:02