தேடுதல்

2018ம் ஆண்டு, வறியோர் உலக நாளையொட்டி, பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் திருத்தந்தை 2018ம் ஆண்டு, வறியோர் உலக நாளையொட்டி, பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் திருத்தந்தை  

வத்திக்கான் வளாகத்தில் ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நவ.10-17

மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி புனித வத்திக்கான் பேதுரு வளாகத்தில், ஏழைகளுக்கென அமைக்கப்படும் தற்காலிக மருத்துவ முகாம், நவம்பர் 10 முதல், நவம்பர் 17 வரை இயங்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 9, இச்சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேராலயத்தில், மாலை 5.30 மணிக்கு ஆடம்பரத் திருப்பலியொன்றை தலைமையேற்று நடத்துகிறார்.

இந்த பசிலிக்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மறையுரை மேடை ஒன்றையும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிலுவையில் அறையுண்ட இயேசுவின் திரு உருவத்தையும் திருத்தந்தை அர்ச்சிக்கிறார் என்றும், இந்த நேர்ந்தளிப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய செபங்களை, திருத்தந்தை முதல் முறையாகப் பயன்படுத்துகிறார் என்றும், உரோம் மறைமாவட்ட அறிக்கை கூறுகிறது.

மூன்றாவது வறியோர் உலக நாள்

மேலும், நவம்பர் 17ம் தேதி, பொதுக்காலத்தின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், காலை 10 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று திருப்பீட வழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இத்திருப்பலிக்குப் பின்னர், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், உரோம் மற்றும், லாட்சியோ மாநிலத்திலுள்ள 1,500க்கும் அதிகமான வறியோருடன் மதிய உணவு அருந்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உலக நாளை முன்னிட்டு, நவம்பர் 10, இஞ்ஞாயிறன்று புனித வத்திக்கான் பேதுரு வளாகத்தில், கடந்த ஆண்டைப் போலவே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்படும். நவம்பர் 17, ஞாயிறுவரை இயங்கும் இந்த முகாம், ஒவ்வொரு நாளும், காலை 8 மணி முதல் இரவு பத்து மணி வரை செயல்படும், இதில் ஏழைகளுக்கு கட்டணமில்லா மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படும் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இத்தகைய முகாமில் 3,500க்கும் அதிகமான மருத்துவர்களும், செவிலியர்களும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2019, 14:59